சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாணியம்பாடி, பாபநாசம் உள்ளிட்ட இரு தொகுதிகளில் தி.மு.க. ஆதரவோடு போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தேர்தல் வெற்றிக்குப் பிறகு திடீரென தவெக. அரசுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையிலும் இடம்பெற்றது. அந்த வகையில் பாபநாசம் எம்.எல்.ஏ. ஷாஜகானுக்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவியும் கிடைத்திருக்கிறது.
இதையடுத்துதான் அமைச்சருக்குரிய அதிகாரம் அவரின் கண்களை மறைத்துவிட்டதோ என்று அச்சம்படும் வகையில் அவரின் நடவடிக்கைகள் அமைந்துவிட்டதாக முஸ்லிம் லீக் நிர்வாகிகளே குற்றம்சாட்டி வருகிறார்கள். சமீபத்தில் விருதுநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஷாஜகான், 'இன்னும் 50 ஆண்டுகளில் தி.மு.க. மொத்தமாக துடைத்தெறியப்பட்டு காணாமல் போகும்' என ஆவேசப்பட்டிருக்கிறார். அவரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்து, அவருக்கு கண்டனங்கள் குவிந்துவருகின்றன. பாபநாசம் தொகுதி முழுவதும், 'தி.மு.க. தயவில் ஜெயித்துவிட்டு தி.மு.க.வையே விமர்சனம் செய்யும் பச்சோந்தி ஷாஜகானே மன்னிப்பு கேள்' என கண்டனப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதற்கும் விளக்கம் அளிக்கும் அமைச்சர் ஷாஜகானின் ஆதரவாளர்களோ, 'பாபநாசம் தொகுதியில் இஸ்லாமியர்கள் நிறைந்திருப்பதால் எங்களது வெற்றி எளிதாகிவிட்டது. இப்படியிருக்கையில், இந்த வெற்றி தி.மு.க.வினரால்தான் கிடைத்தது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. 'தி.மு.க. காணாமல் போகும்' என அமைச்சர் பேசியது நூற்றுக்கு நூறு சரிதான்' என்றனர் கொதிப்புடன்.
-
அமைச்சர் ஷாஜகானின் இந்தப் பேச்சுக்கு தி.மு.க. தலைமை அமைதி காத்துவரும் நிலையில், தி.முக கூட்டணியில் இடம்பெற்று வென்ற நாகை தொகுதி எம்.எல்.ஏ.வும், மக்கள் கட்சித் மனிதநேய தலைவருமான ஜவாஹிருல்லா பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பை அதிகரித்திருக்கிறது. 'திமுக மாவட்டச் செயலாளர்களின் தயவால் வென்ற அமைச்சர் ஷாஜகான், திமு.கவுக்கு எதிராகவே இப்படி பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு. அந்த ஷாஜஹான் மும்தாஜிற்கு கல்லறை கட்டினார்.
ஷாஜஹான் அவர் சார்ந்துள்ள கட்சிக்கே சமாதி கட்டும் வேலையை செய்கிறார். சிறுபான்மையினர் ஓட்டுக்கள் தி.மு.க.விற்கு கிடைக்கவில்லை என்பது திட்டமிட்டு பரப்பும் சதி. இஸ்லாமிய மக்கள் நிறைந்த தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று தி.மு.க. வென்றுள்ளது. தி.மு.க. மீது இஸ்லாமியர்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு இதுவே சான்று முஸ்லிம்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் தவெ.க வெற்றிபெற முடியவில்லை என்பதே உண்மை" என்றார்.
இதுகுறித்து விளக்கம் பெற அமைச்சர் ஷாஜகானை தொடர்பு கொண்டபோது, "பிஸியாக இருக்கிறார். என்ற பதிலே கிடைத்தது.
அரசியலில் இப்படி நடக்கவில்லை என்றால்தானே ஆச்சர்யம்!