பட்ஜெட் 2025

Budget 2025: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஜாக்பாட்... பொம்மை தயாரிப்புக்கு முக்கியத்துவம்!

மத்திய பட்ஜெட் அறிக்கையில் சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

Budget 2025: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஜாக்பாட்... பொம்மை தயாரிப்புக்கு முக்கியத்துவம்!
பொம்மை தயாரிப்புக்கு முக்கியத்துவம்

2025-2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், தொழித்துறை வளர்ச்சியை கருத்தில்கொண்டு சில முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி சிறு குறு நிறுவனங்களும், நடுத்தர நிறுவனங்களுக்கும், 5 கோடி ரூபாயாக இருந்த கடன் உத்தரவாத தொகை, 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க 1.57 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேபோல சிறு குறு நிறுவனங்களுக்கு, 20 கோடி ரூபாய் கடன் உத்தரவாதம் வழங்கப்படும் எனவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் பொம்பை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரம்புடன் தனிப்பயனாக்கப்பட்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்றும், முதல் ஆண்டில் 10 லட்சம் அட்டைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு இடையூறு இல்லாத கடன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அடமானம் இல்லாமல் கடன்களை பெறும் வகையிலான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அதிகளவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தோல் - காலணி உற்பத்தித் தொழிற்சாலைக்கு, உற்பத்தி அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.