விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாளை உள்ளிட்ட தலைவர்கள் தான் கட்சியின் வழிகாட்டிகள் என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.
அதோடு, பெரியாரின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டாலும் , அவரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், யாருடைய மத நம்பிக்கையையும் நாங்கள் தலையிடப்போவதில்லை என்றும் கூறினார். ஆளுங்கட்சியை விமர்சித்த விஜய், ஆளுங்கட்சியின் கூட்டணியில் உள்ள விசிகவின் ’ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ கொள்கை பற்றியும் பேசியிருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், திமுக கூடாரத்திற்கு கூட்டணிக் கட்சிகள் படையெடுக்க தயாராகிவருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து திமுக கூடாரத்தில் பற்றி எரிய தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஆதவ் அர்ஜூனா என்ன சொன்னார் என்றால் “ ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது.
அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய். அவருக்கு வாழ்த்துகள். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் ” என விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இவரின் இந்த பதிவானது திமுக - விசிக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆதவ் ஆர்ஜூனா கூறிய கருத்துகள் திமுக - விசிக கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியதாகவும், திருமாவளவன் தான் கூட்டணியை சுமூகமாக கொண்டு சென்று வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இப்படியான ஒரு சூழலில் கூட்டணிக் கட்சியான திமுகவை நேரடியாக அட்டாக் செய்த விஜய் கூறியுள்ள ’ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற கொள்கையை விசிக வரவேற்றுள்ளது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதாக மாறியுள்ளது என அறிவாலய வட்டாரத்தில் கூறுகின்றனர். கூட்டணிக் கட்சியை சரமாரியாக விமர்த்துள்ளார், அதற்கு எந்தவித கண்டனமும் தெரிவிக்காமல் விஜய்யின் கருத்துக்களை வரவேற்பது தான் கூட்டணி தர்மமா? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புவதோடு, திமுகவுடன் விசிக கூட்டணி முறித்துக் கொண்டு விஜய்யுடன் கூட்டணி வைக்கவே திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். அதற்கு காரணம், அண்மைக்காலமாகவே ஆளுங்கட்சியும் கூட்டணிக் கட்சியான திமுகவை எதிர்த்து மது ஒழிப்பு மாநாடு நடத்தியது, அதில் கலந்துக் கொள்ள அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தது, நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் துணை முதல்வராகலாம் 40 ஆண்டு காலம் அரசியலில் இருந்த திருமாவளவன் துணை முதல்வர் ஆகக்கூடாதா? என்று ஆதவ் அர்ஜூனா கேள்வி எழுப்பியது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிகவின் நீண்ட நாள் கோரிக்கை என திருமாவளவன் விமர்சனங்களுக்கு ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்தது என திமுக - விசிக கூட்டணி சர்ச்சைகளுடனே பயணித்துக் கொண்டிருப்பதுதான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதுஒருப்பக்கம் இருக்க, காங்கிரஸூம் தன் பங்கிற்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டு கடிதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து கடிதம் எழுதியுள்ள காங்கிரஸின் தமிழ்நாடு கமிட்டி பொதுச்செயலாளர் சரவணன், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தவெக மாநாட்டில் 2026-ல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார். ஆகவே தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, திமுக தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்... எனவே தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது... இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்... எனவே தமிழக மக்களின் எண்ணத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன்உதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
சரவணன் கடிதம் எழுதியுள்ளார் என்றால், மாணிக்கம் தாகூரோ மறைமுகமாக "ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது" என்று x தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், விஜய் பற்ற வைத்த நெருப்பு என்பது திமுக கூட்டணிக்குள் கபகபவென பற்றிக் கொண்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. எனவே, விசிக, காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து திமுக தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.