அரசியல்

செல்ஃபி எடுக்க முயன்ற நிர்வாகியின் கையை தட்டிவிட்ட வைகோ...கும்பகோணம் மதிமுக பொதுக்கூட்டத்தில் சலசலப்பு

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநருக்கு வைகோ கண்டனம்

செல்ஃபி எடுக்க முயன்ற நிர்வாகியின் கையை தட்டிவிட்ட வைகோ...கும்பகோணம் மதிமுக பொதுக்கூட்டத்தில் சலசலப்பு
செல்ஃபி எடுக்க முயன்ற நிர்வாகியின் கையை தட்டிவிட்ட வைகோ
கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் மதிமுக சார்பில் மீத்தேன், மேகதாது விழிப்புணர்வு விளக்கப் பொதுக்கூட்டம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய அவர், “என் குடும்பத்திலிருந்து ஒருவர் பதவிக்கு வர வேண்டும் என ஒரு நாளும் விரும்பியதில்லை.

துரை வைகோ அரசியலுக்கு வரக்கூடாது என நினைத்தேன்

நான் இந்தக் குடும்ப அரசியலைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமே இல்லை. என் மகன் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொன்னவன் நான். ஆனால் அவர் கட்சிக்குள், பதவிக்குள் வருவதை ஒருபோதும் நான் விரும்பமாட்டேன் எனச் சொன்னபோது, அத்தனை மாவட்ட செயலாளர்களும் நீங்கள் எதேச்சியதிகாரம் செய்யக் கூடாது. பெரும்பான்மைக்கு நீங்கள் தலைவணங்கித்தான் ஆக வேண்டும்.ஆகவே எல்லோருடைய கருத்தும் என்ன என்பதை வெளிப்படையாகக் கேட்டால் தலைவருடைய மகனுக்கு விரோதமாக ஓட்டளித்து விட்டோம் எனச் சில பேர் கைத்தூக்காமல் இருக்கலாம் என நினைத்தேன்.

ஆகையால் ரகசிய ஓட்டு வையுங்கள். அதற்கு ஒரு வாக்குச்சாவடி வையுங்கள்.106 பேர் இருக்கிறோம். ஒவ்வொருவராகத் தனித்தனியாகச் சென்று ரகசிய ஓட்டை பதிவு செய்துவிட்டு வரட்டும். துரை வைகோ அரசியலுக்கு, மதிமுகவிற்கு வர வேண்டுமா? கூடாதா? இதில் எதை ஆதரிக்கிறீர்கள். இதுதான் வாக்குச் சீட்டு எனக் காட்டினார். மேலும் 106 பேர் வாக்களித்தனர். அந்த வாக்குகளை மற்றவர்கள் எண்ணினார்கள். நான் எண்ணவில்லை. அப்படி எண்ணி முடிக்கிறபோது நிர்வாகக் குழுவில் இருக்கிற 104 பேர் அவன் மதிமுகவிற்குள் வர வேண்டும் என வாக்களித்து உள்ளனர். இரண்டு பேர் கூடாது என்று வாக்களித்து இருந்தார்கள்.இதுதான் துரை வைகோ மதிமுகவிற்குள் பிரவேசிக்க காரணமானது.

நிர்வாகி கையை தட்டிவிட்ட வைகோ

தமிழ்நாட்டை துச்சமாகவும், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கும், தமிழ்நாட்டை துச்சமாக மதிப்பவரும் பதவிக்கு ஒரு சதவிகிதம் கூட லாயக்கில்லாத ஆளுநர் ஆர்.என் ரவி இதுவரை ஒப்புதல் தரவில்லை. அதனால் ஆளுநர் அளிக்கின்ற சுதந்திர தின விருந்தைத் திமுக புறக்கணித்ததுபோல மதிமுகவும் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.

கூட்டம் முடிந்து தொண்டர்கள் சிலர் வைகோவிற்கு சால்வை அணிவிக்க மேடையில் குவிந்தனர்.அப்போது சால்வையை போர்த்த வந்த சிலரிடம் கையில் கொடு என வெடிக்கெனப் பிடுங்கினார். மேலும் வைகோவுடன் செல்ஃபி எடுப்பதற்காகத் தொடர்ந்து முயற்சித்த மதிமுக நிர்வாகியின் கையைத் தட்டிவிட்டார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.