வீடியோ ஸ்டோரி

தனியார் பார் அருகே கொடூரம்... முகம் சிதைத்து வடமாநில நபர் கொ*ல

திருப்பூரில், தனியார் மதுபானக்கூடம் அருகே வடமாநில நபர் தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புரத்தில், திருப்பூர் ரிலாக்ஸ் என்ற பெயரில் தனியார் மதுபானக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக்கூடத்தில், உறுப்பினர்களை மட்டுமே அனுமதிக்க கட்டுப்பாடு இருந்து வருகிறது.

இந்த நிலையில், திங்கட்கிழமை காலை, மதுபானக்கூடம் அருகே வடமாநில நபர் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக, பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற டி.எஸ்.பி. சுரேஷ், காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை மற்றும் போலீசார், அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, விசாரணை  நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் ரத்த மாதிரிகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாய் அர்ஜுன் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதனிடையே, கொலைச் சம்பவம் குறித்த தகவலின் பேரில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை, போலீசார் முதலில் அனுமதிக்கவில்லை. சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு எடுத்துச் சென்றபின்னரே, ஊடகவியலாளர்களை போலீசார் அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட, வடமாநில நபர்  யார்? அந்தப்பகுதிக்கு அவர் வந்தது ஏன்? பாருக்குள் வைத்து கொலை செய்யப்பட்டு சடலம் வெளியே காட்டுப்பகுதியில் வீசப்பட்டதா? உறுப்பினர்கள் மட்டுமே பாரில் அனுமதிக்கப்படும் நிலையில், வடமாநில நபரும் பாரில் உறுப்பினராக இருந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.