ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்பட தொடர் விடுமுறை தினத்தை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. போதுமான ஓட்டுநர்கள் இல்லாத நிலையில் தற்காலிக ஓட்டுநர்களைப் பயன்படுத்தி இந்த பேருந்துகள் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இப்படி கூடுதலாக விடப்பட்ட அரசு விரைவுப் பேருந்து ஒன்று திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை மாதவரத்தை நோக்கி வந்துள்ளது. பேருந்தில் அதிக அளவில் பயணிகள் நெருக்கி அடித்தபடி வந்துள்ளனர்.
சென்னையை பேருந்து நெருங்கிய நிலையில், பேருந்து ஓட்டுநர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஒரு கையில் ஸ்டியரிங்கை இயக்கியபடி, மற்றொரு கையில் செல்போனில் ரீல்ஸ் பார்க்கத் தொடங்கி இருக்கிறார். சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு , சாலையில் வைக்கவேண்டிய கவனத்தை ரீல்ஸிலேயே வைத்துள்ளார்.
கவனம் தப்பினால் மரணம் என்று பேருந்திலேயே எழுதி வைத்திருந்தும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ரீல்ஸ் பார்த்தபடியே ஓட்டுநர் பேருந்தை இயக்க, பயணிகள் பதைபதைப்பில் ஆழ்ந்துள்ளனர். அப்போது பெண் பயணி ஒருவர், ஓட்டுநரின் இந்த ரீல்ஸ் மோகத்தை வீடியோ எடுத்து, நடத்துநரிடம் தெரிவித்து புகார் அளித்துள்ளார்.
அப்போது, பேருந்து ஓட்டுனர் புதியதாக வந்திருப்பதாகவும் தான் அருகில் அமர்ந்து பார்த்துக்கொள்வதாக நடத்துனர் கூறியுள்ளார். ஓட்டுநரின் அலட்சியம் குறித்து எடுத்த வீடியோ அந்தப் பெண் பயணி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி உள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதிர, பயணிகளின் உயிரோடு விளையாடும் ஓட்டுநரை உடனடியாக பணி நீக்கம் செய்வதோடு அவரது உரிமத்தை ரத்து செய்து, கைது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தது.
இதையடுத்து, பிரச்னை பூதாகரமான நிலையில், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரான கோயம்பேடு பணிமனையைச் சேர்ந்த தற்காலிக ஓட்டுநரான பார்த்திபன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நிரந்தர பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக, அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது