வீடியோ ஸ்டோரி

"அது மைக் பிரச்சினை... தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை..” உதயநிதி ஸ்டாலின் அடடே விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைக் சரியாக வேலை செய்யவில்லை எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.

சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சியை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அங்கிருந்த ஊழியர்கள் 3 பேர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அப்போது கண்டமிதில் (கண்டம் + இதில்) என்பதை, கண்டமதில் (கண்டம் + அதில்) என்றும், புகழ் மணக்க என்பதை (திகழ் மணக்க) என்றும் தவறாக பாடினர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது சர்ச்சையானது. இந்நிகழ்ச்சியில், மைக் சரியாக வேலை செய்யாததால், “திராவிட நல் திருநாடும் என்ற வரியில்... 'திருநாடும்...' என்ற வார்த்தை சரியாக ஒலிக்காமல் இடைவெளி ஏற்பட்டது. இவ்வாறு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையுடனும் தடுமாற்றத்துடனும் பாடப்பட்டதை கவனித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிழையின்றி மீண்டும் ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாட அறிவுறுத்தினார். 

இதனையடுத்து இரண்டாவது முறையாக தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய அரசு ஊழியர்கள், மீண்டும் அதே பிழையுடன் பாடினர். இரண்டாவது முறை மைக் தெளிவாக இயங்கியதால் பிழைகள் அனைத்தும் முழுமையாகத் தெரிந்தன. இதனால் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய ஊழியர்களை முறைத்து பார்த்தபடி அமர்ந்திருந்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை என்றும் அவர்கள் பாடும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைக் சரியாக வேலை செய்யவில்லை எனவும் கூறினார். இதனால் தான் அவர்களது குரல்கள் சரியாக கேட்கவில்லை, எனவே மீண்டும் சரியாக பாட வைத்தோம், நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய கீதமும் பாடப்பட்டதாக விளக்கம் கொடுத்தார். முக்கியமாக தேவையில்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டும் எந்த பிரச்சனையும் கிளப்பிவிடாதீர்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தபடி அங்கிருந்துச் சென்றார்.