வீடியோ ஸ்டோரி

மீண்டும் சர்ச்சை பேச்சு... புயலை கிளப்பிய ஆளுநர் ஆர்.என். ரவி!

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், இந்த நாடு பெண்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். அத்துடன், நமது ஆன்மீகத்தையும், கலாச்சாரத்தையும் காலனி ஆதிக்கம் ஒடுக்கியது எனவும் பேசினார். மேலும், தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசியதாகவும், அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றைப் பற்றியான அறிவுத்திறன் குறைவாக உள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கு தொலைநோக்குப் பார்வையை வளர்க்க வேண்டும் என்றும் கூறினார். திமுக அரசுக்கும் ஆளுநருக்கு ஆரம்பத்தில் இருந்தே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் அதன் தொடர்ச்சியாகவே இக்குற்றச்சாட்டை ஆளுநர் வைத்திருப்பதாக தெரிகிறது.