"ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்பான "ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு தொடர்பாக தமிழகத்தில் சிலர் இருந்து கொண்டு ஆட்களை சேர்த்து இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரண்டு வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
"ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு தொடர்பாக கடந்த ஜூன் மாதம் முதல் வழக்கை பதிவு செய்து, தஞ்சையைச் சேர்ந்த அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் (எ) முஜிபுர் ரஹ்மான் அல்தான் சாஹிப் மற்றும் பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அஜீஸ் அகமது என மூவர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், இதே அமைப்பு தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசாரால் 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரண்டாவது வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இரண்டாவது வழக்கில் ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி "ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள், செல்போன்கள், பென்டிரைவ், ஹாட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி முதல் முறையாக 6 நபர்களையும், 6 நாட்கள் போலீஸ் கஷ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்டனர். பின் மீண்டும் அதே 6 நபர்களை இரண்டாவது முறையாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஐந்து நாட்கள் போலீஸ் கஷ்டடி எடுத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் கஸ்டடியில் இவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஃபைசுல் உசேன் (எ) ஃபைசுல் ரஹ்மான் என்ற நபரை அக்டோபர் 8 ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ஃபைசுல் ரஹ்மான் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் அமீது உசேனின் சகோதரர் என்பதும் இவர் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பில் இருந்ததாகவும், இவர்தான் தனது சகோதரர் ஹமீது உசைன் உள்ளிட்ட உறவினர்களை இந்த அமைப்பில் சேர்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்தி தங்கள் பிரச்சாரத்தை பரப்பியதும், மேலும் தேர்தல் வாக்குரிமை மற்றும் வாக்களிப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், பைசுல் ரஹ்மான் தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பல்வேறு நாடுகளில் தொடர்பில் இருப்பது ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, காஷ்மீரை விடுவிக்க பாகிஸ்தானிடம் இருந்து ராணுவ உதவியை நாடியாதாகவும், பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளோடு தொடர்பிலிருந்ததும் தெரியவந்ததாக NIA அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' அமைப்பை கட்டியெழுப்பி அதன் மூலம் இந்திய அரசைக் கவிழ்த்து 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' சித்தாந்த அமைப்பை நிறுவதற்காக பல்வேறு நாட்டிலுள்ள தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் ஃபைசுல் ரஹ்மான் தொடர்பிலிருந்து அதற்கான வேலைபாடுகளை செய்து வந்ததாகவும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்
இந்தியாவிற்கு எதிராக சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வகையில் இந்த 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர் என்ற தீவிரவாத அமைப்பாக செயல்படுவதாகவும், இந்த அமைப்பானது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்திய பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரியவந்ததையடுத்து 'ஹிஸ்ப்-உத் தஹ்ரீர்' அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தி, அதனை தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
UAPA சட்டம் எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் என்ற அடிப்படையில் உள்ள பட்டியலில் இந்த தீவிரவாத அமைப்பை சேர்த்து அந்த சட்டத்தின் கீழ் இனிவரும் காலங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டு மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டுள்ளது.