சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக, உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் சுற்றுலா வாகனங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் பகல் நேரம் மட்டும் இன்றி இரவு நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகன விபத்துகளும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த விபத்துகளுக்கு காரணம் சிக்னல்கள் முறையாக இயங்காததும், ஒளிரும் ஸ்டிக்கர்கள் தேவைப்படும் இடங்களில் ஒட்டப்படாததும் தான் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். சுற்றுலா காலங்களில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாகவும் உதகையில் இருந்து சமவெளி பகுதிகள் செல்ல கோத்தகிரி வழியாகவும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
இந்த நிலையில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிக்னல் விளக்குகள் எரியாமல் உள்ளன. மேலும் துருப்பிடித்து கம்பங்கள் அகற்றப்பட்டு சீர் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சிக்னல் விளக்குகள் இன்றி, பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.