வீடியோ ஸ்டோரி

பாராலிம்பிக்ஸில் புதிய வரலாறு.. 29 பதக்கங்களுடன் நிறைவு செய்த இந்தியா

பாராலிம்பிக்ஸ் விளையாட்டு திருவிழா ஆடல் பாடல் என கோலாகலமாக நிறைவு பெற்றது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக்ஸை தொடர்ந்து பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. இதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்திய மாற்றுத்திறன் வீரர்கள் தங்களின் தனிதிறமைகளை வெளிப்படுத்தி வெற்றி வாகைசூடினர். அதன்படி 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என மொத்தமாக 29 பதக்கங்களுடன் இந்தியா 18வது இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்தது. பாரலிம்பிக்ஸில் சீனா 220 பதக்கங்களுடன் முதலிடமும், போட்டிகளை நடத்திய பிரான்ஸ் 75 பதக்கங்களுடன் 8வது இடம் பிடித்தது. 

இதனிடையே 29 பதக்கங்களை வென்ற இந்திய பாரா- தடகள வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மையே இந்த வெற்றிக்கு காரணம் என்றும், பாரா- தடகள வீரர்களால் நாடு பெருமை கொள்கிறது எனவும் அவர் தெரிவித்தார். 

இதைதொடர்ந்து பாரீஸ் நகரில் மிக பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் கண்கவர் இசைக்கச்சேரியுடன் நிறைவு விழா நடைபெற்றது. இதில் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் பங்கேற்று ஆடி, பாடி மகிழ்ச்சியடைந்தனர். இதேவேளையில் வண்ண விளக்குகளாலும், வான வேடிக்கையாலும் மைதானம் ஜொலித்தது. மேலும், பாராலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வண்ணம், பாரீஸ் நகரின் அடையாளமாக விளங்கும் ஈஃபிள் டவரும் வண்ண விளக்குகளால் மின்னியது. தொடர்ந்து அடுத்த ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் அமெரிக்காவில் நடக்கவிருக்கிறது.