தகாத உறவில் பிறந்த குழந்தையை 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக தாயாரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக மேலும் இரண்டு பெண்களையும் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி. கூலி வேலை செய்து வரும் சுகந்தியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் மகளும், 3ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். இவர் சமீனா பானு என்பவரது வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சுகந்தி, தகாத உறவில் இருந்ததால் கர்ப்பமடைந்து பெண் குழந்தை பெற்றுள்ளார். குழந்தைக்கு 11மாதம் ஆகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சுகந்தி கையில் குழந்தை இல்லாதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த யாரோ ஒருவர், சைல்டு ஹெல்ப் லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர்.
அதன்படி திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உத்தரவின்பேரில், குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் சுகந்தியிடம் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.
அவர்களின் விசாரணையில் பெற்ற குழந்தையை தாயார் சுகந்தியே விற்பனை செய்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. சுகந்தி வசிக்கும் வீட்டு உரிமையாளர் சமீனா பானு, சுகந்தியின் வறுமையை காரணம் காட்டி குழதையை விற்றுவிடலாம் என்று கூறியுள்ளார். தகாத உறவினால் பெற்ற குழந்தை என்று அக்கம்பக்கத்தினரின் எள்ளலுக்கு ஆளானதாலும், குழந்தையாவது நல்லபடியாக வளரட்டும் என்றும் முடிவெடுத்த சுகந்தி, குழந்தையை விற்பதற்கு சம்மதித்துள்ளார்.
அதன்பேரில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா நாச்சியார்கோவிலைச் சேர்ந்த ஆயிஷா நஷிமா என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றுள்ளனர்.
இதையடுத்து குழந்தையை மீட்டு, தாயையும், சிசுவையும் திருவாரூர் அரசு காப்பகத்தில் குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் சேர்த்துள்ளனர். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குழந்தை கடத்தல் குறீத்து வலங்கைமான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் சுகந்தி, சமீமா பானு, ஆயிஷா நஷீமா ஆகியோர் வழக்கு பதிவு செய்த போலீசார், குழந்தை விற்பனையில் ஈடுபட்ட சமீமா பானு, குழந்தையை வாங்கிய ஆயிஷா நஷீமா ஆகியோரை தேடி வருகின்றனர். வறுமையை காரணம் காட்டி பெற்ற குழந்தையை தாயே விற்பனை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது