சென்னை அசோக் நகர் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாற்றுத் திறனாளிகளை அவமரியாதை செய்யும் வகையிலும், மாணவர்கள் மத்தியில் மூட நம்பிக்கை விதைக்கும் வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மகாவிஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மகாவிஷ்ணுவுக்கு சொந்தமாக திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்வதற்காக போலீசார் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், சொற்பொழிவு மூலம் ஈட்டிய வருமானம் மற்றும் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.