வீடியோ ஸ்டோரி

மருத்துவக்கல்லூரியில் பயங்கரம்.. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் கொடுமையால் மாணவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் கொடுமையால் மாணவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல் உதவி ஆணையரின் மகனே ராகிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் ஜோஸ் ஜேக்கப். நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் அதிகாரியாக உள் ஜோஸ் ஜேக்கப்பின் மகன் ஆலன் கிரைசா,  சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி உள்ளார்.

வியாழக்கிழமை இரவு விடுதியில் ஆலன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது, 5ஆம் ஆண்டு படித்துவரும் மாணவர்களான கவின், தியானேஷ் மதுபோதையில் அங்கு வந்துள்ளனர். அவர்கள் ஆலனை அழைத்து ராகிங் செய்ததோடு, கன்னத்தில் அறைந்ததாகவும் தெரிகிறது.

இதனால் ஆலன் அவர்களை தாக்கியபோது, இருவரும் பீர்பாட்டிலால் ஆலனை தாக்கியதோடு, தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்து சென்று மேலும் தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மதுபோதையில் விடுதியின் ஜன்னல், கண்ணாடி, கதவு, கட்டில் போன்றவற்றை உடைத்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து சத்தம் கேட்டு சென்ற காவலாளி அவர்களைத் தடுத்து வெளியே அனுப்பி வைத்தார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனை உள்ளிருப்பு அதிகாரி  வாணி நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் காயம் அடைந்த மாணவர் ஆலன் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், மகன் மீது நடந்த தாக்குதல் குறித்து அறிந்து சென்னை விரைந்து வந்த ஜோஸ் ஜேக்கப், மகனை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். ஏற்கனவே மகனுக்கு ராகிங் கொடுமை நடந்ததால் 2ஆம் ஆண்டு முடிக்கும்வரை வெளியே தங்க வைத்ததாகவும், ராகிங் கமிட்டி என்ன செய்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.  தன் மகனுக்கு நிகழ்ந்தது போல வேறு யாருக்கும் நிகழக்கூடாது எனவும் அவர் வேதனையுடன் கூறினார்.