வீடியோ ஸ்டோரி

கோவையில் உள்ள தொழிலதிபர்கள் வீடுகளில் நான்காவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை...

கோவையில் உள்ள தொழிலதிபர்கள் வீடுகளில் நான்காவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அஸ்வின் பேப்பர் மில் உரிமையாளர் பாலசுப்ரமணியம், தொழிலதிபர் வரதராஜனுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவையில் 4வது நாளாக பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

கோவை சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும் ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் வசித்து வரும் Bull நிறுவனத்தின் உரிமையாளர் பொன்னுதுரை என்பவரின் இல்லத்தில் இன்று நான்காவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல லஷ்மி டூல்ஸ் உரிமையாளர்  வரதராஜன் என்பவரது இல்லதில் 3வது நாளாக சோதனை நடத்தி வந்த நிலையில், அது நிறைவுப்பெற்றது எனினும் அவரது உறவினர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு சொந்தமான ஏழு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

இதேவேளையில், ராவத்தூர் பிரிவு , பாப்பம்பட்டி, அப்ப நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நிறுவனங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நிறுவனத்திற்கு முறையாக ஆவணங்கள் உள்ளதா? வரிகள் செலுத்தப்பட்டுள்ளதா என்ற அடிப்படையில் சோதனைகள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.