கொஞ்சம் தங்கம்... நிறைய கவரிங் என்று கில்லாடித்தனமாக டூப்ளிகேட் நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் இந்த மூவரும்.
திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்க வந்த நபர் அளித்த தங்கத்தை நகை மதிப்பீட்டாளர் ஆய்வு செய்துள்ளார். அதில், கம்மல், மோதிரம் ஆகியவை தங்கம் என்பதும் செயின் கவரிங் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தனியார் நிதி நிறுவன மேலாளர் அளித்த தகவலில், பாலக்கரை போலீசார் அடகு வைக்க வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்த சரவணன் என்பதும், அவரது நண்பர்களான டேவிட், ராம்குமார் ஆகியோருடன் சேர்ந்து இதே போன்று தில்லாலங்கடித்தனத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
ஆட்டோ ஓட்டுநர்களான இந்த மூவரும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக கவரிங் கடைகளுக்கு சென்று விலை உயர்ந்த கவரிங் நகைகளை வாங்கி உள்ளனர். மேலும், 1 பவுன், ஒன்றரை பவுன் எடைகளில், தோடு, மோதிரம், வளையல் போன்றவைகளையும் வாங்கியுள்ளனர். பின்னர் கவரிங் மற்றும் தங்க நகைகளை ஒன்றாகக் கலந்து தங்கம் எனக்கூறி, அருகில் உள்ள தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.
இவர்கள் பல வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்த போது, அங்கு பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்கள் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இப்படி போலி நகைகளை அடகு வைத்து 30 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் எந்தெந்த வங்கிகளிலும், தனியார் நிதி நிறுவனங்களிலும் அடகு வைத்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன்பின்னர், மூவரையும் கைது செய்த போலீசார், திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.