உடல்நலக் குறைவு காரணமாக வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் நேற்று காலமான நிலையில் அவரது உடலுக்கு பழ. நெடுமாறன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (76) நுரையீரல் தொற்று காரணமாக சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 3-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட த.வெள்ளையனை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை 03.00 மணியளவில் உயிரிழந்தார்.
ஏற்கனவே மூளையில் ரத்தக் கசிவு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து மீண்டு தேறி வந்த நிலையில், தற்போது நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. த.வெள்ளையன் வணிகர்களின் தலைவராக மட்டும் அல்லாமல், பொதுவில் மக்கள் நலன் சார்ந்து இயங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.