உலகம்

பணமோசடி வழக்கு...துபாயில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய கோடீஸ்வரர்

துபாயில் பணமோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

பணமோசடி வழக்கு...துபாயில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய கோடீஸ்வரர்
இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வர் பல்விந்தர் சிங் சாஹ்னிக்கு துபாயில் சிறை தண்டனை விதிப்பு
துபாயைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் பல்விந்தர் சிங் சாஹ்னி, பணமோசடி உள்ளிட்ட நிதி குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அபு சபா என்று அழைக்கப்படும் கோடீஸ்வரர் சாஹ்னிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 500,000 திர்ஹம் (ரூ. 1,14,89,750) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நாடு கடத்தப்படுவதற்கு முன்பு தொழிலதிபரிடமிருந்து திர்ஹம் 150 மில்லியன் (ரூ. 3,446 மில்லியன்) பறிமுதல் செய்யவும் துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாஹ்னி, ஷெல் நிறுவனங்களின் நெட்வொர்க் மூலம் 150 மில்லியன் திர்ஹம்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. தொழிலதிபர் மற்றும் அவரது மகன் உட்பட 33 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பல்விந்தர் சிங் சாஹ்னி யார்?

53 வயதான தொழிலதிபர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, இந்தியா மற்றும் பிற நாடுகளில் செயல்படும் ராஜ் சாஹ்னி குழுமத்தின் (RSG) நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். காசர் சபாவின் குடியிருப்பு கட்டிடங்கள், ஜுமேரா வில்லேஜ் சர்க்கிளில் உள்ள 24 மாடி புர்ஜ் சபா அடுக்குமாடி குடியிருப்பு வளாகம், பே சதுக்கத்தில் உள்ள வணிக சொத்து, பிசினஸ் பே மற்றும் சபா துபாய் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகியவை தொழிலதிபரின் சொத்தில் அடங்கும்.

தொழிலதிபர் சாஹ்னி ஒரு சொகுசு கார் சேகரிப்பாளராக அறியப்படுகிறார். மேலும் அவர் அடிக்கடி தனது விலையுயர்ந்த வாகனங்களை சமூக வலைத்தளங்களை வெளியிட்டு பரப்பை ஏற்படுத்துவார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு தனது ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் ஒன்றிற்கு 33 மில்லியன் திர்ஹம்களுக்கு (அப்போது சுமார் $9 மில்லியன்) கார் எண் D5-ஐ வாங்கிய பிறகு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

சாஹ்னிக்கு எதிரான வழக்கு

பெரும்பாலும் தனது தனித்துவமான ராயல் நீல நிற கந்துரா அணிந்து காணப்படும் சாஹ்னி, இன்ஸ்டாகிராமில் சுமார் 3.3 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். சாஹ்னி உள்ளிட்டோர் மீதான வழக்கு 2024ல் பர் துபாய் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் பொது வழக்கறிஞர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குள்ளும் வெளிநாட்டிலும் விரிவான நிதித் தரவு மற்றும் வணிக தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை தனது தீர்ப்பில், துபாயின் நான்காவது குற்றவியல் நீதிமன்றம், போலி நிறுவனங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நிதி பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி ஒரு அதிநவீன பணமோசடி ஈடுபட்டதாக சாஹ்னியையும், மற்றவர்களையும் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.நீதிமன்றம் சாஹ்னிக்கு 500,000 திர்ஹம் அபராதம் செலுத்தவும், சட்டவிரோத நடவடிக்கையின் வருமானமாக நம்பப்படும் 150 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.

நாடு கடத்த உத்தரவு

தண்டனை முடிந்ததும் அவரை நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பலருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் உட்பட சிறிய அளவிலான தண்டனைகள் விதிக்கப்பட்டன. அதே நேரத்தில் மூன்று நிறுவனங்களுக்கு தலா 50 மில்லியன் AED அபராதம் விதிக்கப்பட்டது.