உலகம்

ரஷ்ய அதிபருடன் அஜித் தோவல் முக்கிய சந்திப்பு: பாதுகாப்பு, எரிசக்தி குறித்து பேச்சுவார்த்தை!

அமெரிக்கா விதித்த வரி விதிப்புக்கு மத்தியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்து பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரஷ்ய அதிபருடன் அஜித் தோவல் முக்கிய சந்திப்பு: பாதுகாப்பு, எரிசக்தி குறித்து பேச்சுவார்த்தை!
ரஷ்ய அதிபருடன் அஜித் தோவல் முக்கிய சந்திப்பு: பாதுகாப்பு, எரிசக்தி குறித்து பேச்சுவார்த்தை!
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

டிரம்ப் நிர்வாகம், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவின் சில பொருட்களுக்கு 50% வரி விதித்த சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திப்பின் பின்னணி
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதிலிருந்து, பல நாடுகளின் மீது பரஸ்பர வரியை விதித்து வருகிறார். சமீபத்தில், ஆகஸ்ட் 6, 2025 அன்று, இந்தியப் பொருட்களுக்கு ஏற்கனவே இருந்த 25% வரியுடன் கூடுதலாக 25% சேர்த்து மொத்தமாக 50% வரியை அமெரிக்கா விதித்தது.

இந்த நடவடிக்கைக்கு இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமும், அதை அதிக லாபத்திற்கு பிற நாடுகளுக்கு விற்பனை செய்வதன் மூலமும் இந்தியா, ரஷ்யாவிற்கு உதவுவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், ரஷ்யா இந்த நிதியை உக்ரைன் போருக்குப் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நியாயமற்றது என்றும், தனது பொருளாதாரத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

தோவல்-புதின் சந்திப்பு

இந்தச் சூழ்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகஸ்ட் 6 அன்று மாஸ்கோ சென்றார். அங்கு முக்கிய அதிகாரிகளுடன் இரு நாடுகளின் உறவுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆகஸ்ட் 7 அன்று, அவர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து, இருதரப்பு உறவுகள்குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

குறிப்பாக, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு போன்ற முக்கிய துறைகளில் இருவரும் விவாதித்தனர். இதற்கு முன், அஜித் தோவல் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்குவை சந்தித்து பேசினார்.

இந்த ஆண்டின் இறுதியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.