உலகம்

வௌவால் கடித்ததால் ஒருவர் உயிரிழப்பு: ஆஸ்திரேலியாவை உலுக்கிய அபூர்வ வைரஸ் தொற்று!

ஆஸ்திரேலியாவில் வௌவால் கடித்ததில் ரேபிஸ் போன்ற அபூர்வ வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வௌவால் கடித்ததால் ஒருவர் உயிரிழப்பு: ஆஸ்திரேலியாவை உலுக்கிய அபூர்வ வைரஸ் தொற்று!
வௌவால் கடித்ததால் ஒருவர் உயிரிழப்பு: ஆஸ்திரேலியாவை உலுக்கிய அபூர்வ வைரஸ் தொற்று!
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த அந்த நபரை சில மாதங்களுக்கு முன்பு வௌவால் ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. அந்த வௌவாலுக்கு ஆஸ்திரேலியன் பேட் லிசா வைரஸ் (Australian bat lyssavirus) தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் ரேபிஸ் நோயுடன் நெருங்கிய தொடர்புடையது. ஆஸ்திரேலியாவில் ரேபிஸ் நோய் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆஸ்திரேலியன் பேட் லிசா வைரஸ் தொற்று மிகவும் அரிதானது. இதற்கு தற்போது வரை மீண்டு வருவதற்கான சிகிச்சை எதுவும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் வடக்கு நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்தவர் என்றும், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. வௌவால் உமிழ்நீர் காயம் அல்லது கீறல் மூலம் மனித உடலில் நுழைந்தால் இந்த வைரஸ் பரவும். இதன் அறிகுறிகள் தெரிய சில நாட்கள் முதல் பல வருடங்கள் வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. தலைவலி, காய்ச்சல், சோர்வு போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் தென்படும். பின்னர், உடல்நிலை மோசமடைந்து பக்கவாதம், வலிப்பு, மனத் தடுமாற்றம் ஏற்பட்டு இறுதியில் மரணம் நிகழும் என்று கூறப்படுகிறது.

1996ஆம் ஆண்டு இந்த வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, இதுவரை மூன்று பேர் மட்டுமே இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், "பொதுமக்கள் வௌவால்களைத் தொடுவதையோ, கையாளுவதையோ தவிர்க்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் உள்ள எந்த வௌவாலுக்கும் லிசா வைரஸ் தொற்று இருக்கலாம். ஒருவேளை வௌவால் கடித்தாலோ அல்லது கீறினாலோ, உடனடியாக அந்த இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் 15 நிமிடங்களுக்கு நன்கு கழுவ வேண்டும். மேலும், ஆன்டி-வைரஸ் கிருமி நாசினியைப் பயன்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பறக்கும் நரிகள் மற்றும் பூச்சி உண்ணும் வெளவால்களில் காணப்படுகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு எந்த வகை வௌவால் கடித்தது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.