ஆன்மிகம்

சித்திரை திருவிழா... தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்!

உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா ஐந்தாம் நாள் நிகழ்வான தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரரை வழிநெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழா... தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்!
தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்!
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. விழாவினை முன்னிட்டு நாள்தோறும் அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

இந்நிலையில் விழாவின் 5 ஆம் நாள் நிகழ்வாக தங்க குதிரை வாகனத்தில் தனி தனியாக மீனாட்சியம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை சமேதராக வடக்குமாசி வீதி ராமாயணசாவடியில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் வடக்கு மாசி வீதி, கீழ மாசி வீதி, அம்மன் சந்நிதி வழியாக சுவாமியும் அம்மனும் வீதி உலா நடைபெற்று கோயிலுக்குள் வந்தடைந்தனர்.

சுவாமியும் அம்மனும் வீதி உலா வந்தபோது வீதிகள் முழுவதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனையும். சுவாமியையும் தரிசனம் செய்தனர். சுவாமி அம்மன் வீதி உலாவின் போது சுவாமியின் முன்பாக ஏராளமான சிறுமிகள் மீனாட்சியம்மன் ,சிவபெருமான், முருகர், ஆண்டாள், கிருஷ்ணன், வேடம் அணிந்தும் சிறுவர்கள் உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் வேடங்களை அணிந்தும் பல்வேறு இசைவாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர்.

திருவீதிவுலா நிறைவுற்று சுவாமியும் அம்மனும் கோயிலுக்குள் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, வேடர் பறிலீலை நிகழ்ச்சி, தல ஓதுவாரால் சொல்லப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.