ஆன்மிகம்

Thaipusam 2025 : களைக்கட்டிய தைப்பூச திருவிழா.. திருத்தணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Tiruttani Murugan Temple Thaipusam 2025 : தைப்பூசத்தையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

Thaipusam 2025 : களைக்கட்டிய தைப்பூச திருவிழா..  திருத்தணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருத்தணி முருகன் கோயில்

Tiruttani Murugan Temple Thaipusam 2025 : தை மாதத்தில் பெளர்ணமியும் பூச நட்சத்திரமும் சேர்ந்து வரக் கூடிய நாளில் முருகனுக்கு மிகவும் விசேஷமான தைப்பூச வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு இன்று தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதையடுத்து பக்தர்கள் முருகன் கோயில்களில் குவிந்து வருகின்றனர். தைப்பூசத்தையொட்டி 48 நாட்கள் தொடர் விரதம் இருக்கும் பக்தர்கள் காவடிகளை  சுமந்து முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்வார்கள். அங்கு முருகனை பக்தியுடன் தரிசித்துவிட்டு விரதத்தை முடித்துக் கொள்வார்கள். 

இந்நிலையில், முருகப்பெருமானின் ஆறு படை வீடுகளுள் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசத்தை ஓட்டி இன்று அதிகாலை முதலே மூலவர் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தைப்பூச விழாவையொட்டி தமிழகம் மட்டுமில்லாமல், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை.. வள்ளி- கும்மி நடனத்தை பார்த்து ரசித்த பக்தர்கள்

மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக முருகப்பெருமானுக்கு மாலை அணிந்தும், விரதம் இருந்தும் காவடி எடுத்து வந்து வழிபட்டு செல்கின்றனர். மலைக்கோயிலில் அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருவதால், மலைக்கோயிலுக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள், கார், வேன் மற்றும் ஆட்டோக்கள் மலைப்பாதை நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. 

பக்தர்கள் பாதுகாப்பிற்காக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில்  300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.