ஆன்மிகம்

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா இன்று பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காப்பு அணிந்து வழிபாடு செய்தனர்.

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
உலகப் புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா களைகட்டியது; பக்தர்களின் விண்ணை பிளக்கும் கோஷத்தால் கோவில் பிரகாரம் அதிர்ந்தது!

உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, மைசூருக்கு அடுத்தபடியாகத் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில், இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு முதன்முறையாக பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனால், அதிகாலையிலேயே பக்திப் பரவசத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர்.

கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 1.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் தொடங்கின. அதைத் தொடர்ந்து, காலை 3.00 மணிக்கு கொடி பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், அதிகாலை 5.30 மணி முதல் 6.00 மணிக்குள், கோவில் உள் பிரகாரத்தில் உள்ள செப்புக் கொடிமரத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் பக்தி கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது.

கொடியேற்றத்திற்குப் பிறகு, கொடிமரத்திற்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் `ஓம் காளி, ஜெய் காளி` என விண்ணை பிளக்கும் கோஷமிட்டு, பக்திப் பரவசத்துடன் காப்பு அணிந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதோடு, பக்தர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலங்களில் அருள்பாலித்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நள்ளிரவில் கோவில் கடற்கரையில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.