சினிமா

முடிச்சு விட்டாங்க போங்க.. விக்ரம் படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்.. ரசிகர்கள் ஷாக்

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸிற்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

முடிச்சு விட்டாங்க போங்க.. விக்ரம் படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்.. ரசிகர்கள் ஷாக்
வீர தீர சூரன்

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து, ‘சித்தா’ பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘வீர தீர சூரன்’. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஹெச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த படத்தின் ரிலீஸிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடைக்கால தடை

’வீர தீர சூரன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹெச்.ஆர் பிக்சர்ஸுக்கு  நிதியுதவி வழங்கிய பி4யு நிறுவனத்திற்கு ஓடிடி உரிமம் விற்கப்படாமலேயே படத்தை வெளியிடுவதாக அந்நிறுவனம் (பி4யு) டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும்  படம் தொடர்பான ஆவணங்களை 48 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால், தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் சென்றனர். அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் இப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.