சினிமா

"பாலியல் குற்றம் உறுதியானால் திரைத்துறையில் தடை விதிக்க வேண்டும்" - இயக்குநர் பேரரசு

இனிமேல் பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும், பத்து வருடத்திற்கு முன்பு எட்டு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என்று புகார் தெரிவித்தால் அது கதை போல் ஆகிவிடும் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற கோவில் குடமுழுக்கு விழாவில் திரைப்பட இயக்குனர் பேரரசு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேசிய பேரரசு, ”பாலியல் குற்றங்கள் உண்மையாக இருந்தால் நிச்சயம் கண்டிக்க வேண்டும்.

தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் கண்டனம் தெரிவிப்பதோடு மட்டும் இல்லாமல், திரைத்துறையில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். நடிகராக இருந்தால் நடிக்க தடை விதிக்க வேண்டும். இயக்குநராக இருந்தால் படம் இயக்க தடை விதிக்க வேண்டும், தயாரிப்பாளராக இருந்தால் படம் தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என்றார்.

நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடுத்தது தவறு செய்ய பயப்படுவார்கள். இது போன்ற பாலியல் குற்றங்களுக்கு காவல்துறையோ, நீதிமன்றமோ தண்டனை வழங்கி விட முடியாது. ஏன் என்றால் இதற்கு ஆதாரம் இருக்காது. எனவே சங்கங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிமேல் பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும், பத்து வருடத்திற்கு முன்பு எட்டு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என்று புகார் தெரிவித்தால் அது கதை போல் ஆகிவிடும். நடிகைகளுக்கு மட்டும் இல்லை தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பாலியல் தொல்லை ஏற்பட்டால் நடிகர் - நடிகைகள் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.