லைஃப்ஸ்டைல்

கோதுமை சாப்பிட்டால் தலைமுடி கொட்டுமா? டாக்டர் ரவிக்குமார் விளக்கம்

மகாராஷ்டிராவில் ரேஷன் கடைகளில் வழங்கிய கோதுமையினை உணவுக்கு பயன்படுத்தியதால் அப்பகுதி மக்களுக்கு தலைமுடி உதிர்கிறது என தகவல்கள் பரவிய நிலையில், கோதுமை சாப்பிட்டால் தலைமுடி கொட்டுமா? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் டாக்டர் த.ரவிக்குமார். அதன் விவரம் பின்வருமாறு-

கோதுமை சாப்பிட்டால் தலைமுடி கொட்டுமா? டாக்டர் ரவிக்குமார் விளக்கம்
Doctor Ravikumar explains on Does eating wheat cause hair loss
மகாராஷ்டிராவில் புல்தானா மாவட்டத்தின் சில கிராமங்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் திடீரென தலைமுடி உதிர்ந்து, வழுக்கையான செய்தி, மீடியாக்களில் சமீபத்தில் தலைதூக்கியது. ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட கோதுமையில் ‘செலினியத்தின்’ அளவு அதிகமாக இருந்ததுதான் காரணம் என்றும் கூறப்பட்டது.
‘செலினியம்’ (selenium) என்பது ஒரு கனிமம். இது, நம் உடலுக்குத் தேவையான ஒன்று. ஆனால், அதிகளவு செலினியம் எடுத்துக்கொண்டால், சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். இது, முடி உதிர்வதற்கும் காரணமாக அமையலாம்.

தலைமுடி கொட்டியதற்கு கோதுமை காரணமா?

”கோதுமைதான் இதற்கு முழு காரணம் என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இதுகுறித்து மேலும் ஆய்வுகள் நடந்துவருகின்றன. ‘கோதுமை சாப்பிடுவதால் தலைமுடி கொட்டும்’ என்ற குற்றச்சாட்டு, மகாராஷ்டிராவில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் பரவியது. ஆனால், அது இன்னும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.

தவிர, கோதுமையில் ‘செலினியம்’ அளவு அதிகமாக இருந்ததால், ‘ஜிங்க்’ (zinc) குறைபாட்டுக்கு வழிவகுத்திருக்கலாம். அதுதான் முடி உதிர்வதற்குக் காரணமாக இருக்கலாம். ‘செலினியம்’ என்பது, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பாதுகாப்பு, தைராய்டு ஹார்மோன் வளர்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் ஓர் அத்தியாவசிய கனிமம் ஆகும். இது, இயற்கையாகவே மண், நீர் மற்றும் சில உணவுகளில் காணப்படுகிறது.”

செலினியத்தின் பண்பு என்ன?

”செலினியம், செலினோ புரோட்டீன்களின் ஒரு முக்கிய அங்கமாகும். இது, ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. புற்றுநோய் மற்றும் இதயநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். புற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் செலினியத்தின் பங்கைப் பலரும் ஆராய்ந்துள்ளனர். உதாரணமாக, பெருங்குடல் புற்றுநோய்க்கு முன்னோடிகளான மேம்பட்ட பெருங்குடல் அடினோமாக்கள் மீண்டும் வருவதை செலினியம் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. கூடுதலாக ‘கீமோ தெரபி’க்கு உட்படும் புற்றுநோய் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், பக்கவிளைவுகளைக் குறைக்கவும் உதவுகிறது.

செலினியம், அதன் நோயெதிர்ப்புத் திறன் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. ‘கீமோ தெரபி’ போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் சிகிச்சைகளுக்கு உட்படுவோருக்கு இது மிகவும் நன்மைப் பயப்பதாகக் கூறப்படுகிறது. நாள்பட்ட பாதிப்புகளான ‘டைப் _ 2 நீரிழிவு’ மற்றும் இதயநோய்கள் உள்ளிட்ட நாள்பட்ட பிரச்னைகளை நிர்வகிப்பதில், செலினியம் சப்ளிமென்டேஷன் அதன் சாத்தியமான நன்மைகளுக்காக ஆராயப்பட்டுள்ளது. இருப்பினும், முடிவுகள் குழப்பம் தருபவையாக உள்ளன என்றும் அறியப்படுகிறது.

நன்மைகள் இருந்தாலும் கூட, அதிகளவு செலினியமானது நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். இரைப்பை, குடல் தொந்தரவு, முடி உதிர்தல் மற்றும் நகமாற்றங்கள் உள்ளிட்ட அறிகுறிகளால் வகைப்படுத்தப்படும். கடுமையான சந்தர்ப்பங்களில், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை இது ஏற்படுத்தும் என்கின்றனர், மருத்துவர்கள்.”

முடி உதிர்வுக்கு பங்களிக்கும் மற்ற காரணங்கள்:

” ‘புரோஸ்டேட் புற்றுநோய்’ நோயாளிகளில் அதிகளவு செலினியம் சப்ளிமென்ட் குறித்த ஓர் ஆய்வில், பக்கவிளைவுகள் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதிகளவில் எடுக்கும் செலினியம் சப்ளிமென்டேஷன்களின் நீண்டகால விளைவுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள, மேலும் ஆராய்ச்சி தேவை என்கிறது, மருத்துவ உலகம்.

முடி உதிர்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில், மன அழுத்தம், சீரானப் பராமரிப்பின்மை, மரபணு, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹார்மோன் மற்றும் வைட்டமின் சார்ந்த பிரச்சினைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பருவகால மாற்றங்களும் முடி உதிர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.”

(கட்டுரை: டாக்டர் த.ரவிக்குமார், குமுதம் சிநேகிதி.,29.5.2025)