லைஃப்ஸ்டைல்

அது என்ன ஜப்பனீஸ் வாக்கிங்? ஒரு நாளைக்கு 30 நிமிஷம் நடந்தா போதும்!

Interval walking training என அழைக்கப்படும் ஜப்பானிய நடைப்பயிற்சி முறையினை மேற்கொள்வது எப்படி? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை இப்பகுதியில் காணலாம்.

அது என்ன ஜப்பனீஸ் வாக்கிங்? ஒரு நாளைக்கு 30 நிமிஷம் நடந்தா போதும்!
Japanese Walking: Achieve Fitness with Just 30 Minutes a Day
நடைப்பயிற்சி மேற்கொள்வதால் என்ன மாதிரியான நன்மைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் நடைப்பயிற்சியினை எந்த வகையில் மேற்கொண்டால், நலன் பலன்களை பெற முடியும் என தொடர்ச்சியாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

ஹிரோஷி நோஸ் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த பிற ஆராய்ச்சியாளர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு "Interval walking training" (IWT) என்கிற நடைப்பயிற்சி முறை தொடர்பான ஆய்வினை மேற்கொண்டார்கள். அந்த ஆய்வின் முடிவில், அதிக தீவிரம் கொண்ட இடைவெளி நடைப்பயிற்சி (Interval walking training) மேற்கொண்ட நபர்களின் இரத்த அழுத்தம், தசைகளின் தன்மையானது, மிதமான அல்லது தொடர்ச்சியான வேகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நபர்களை விட சிறந்த ரிசல்டை தந்திருந்தது.

Interval walking training:

அதிக தீவிரம் கொண்ட இடைவெளி நடைப்பயிற்சி (Interval walking training) என்பது, 3 நிமிடங்கள் வேகமாக நடந்து, பின்னர் 3 நிமிடங்கள் மெதுவான வேகத்தில் நடந்து, மீண்டும் வேகமாக, மெதுவாக என நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முறையாகும். இந்த வகையில் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் அல்லது வாரத்திற்கு குறைந்தப்பட்சம் நான்கு நாட்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஹிரோஷி நோஸ் மேற்கொண்ட ஆய்வில் அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆய்வு ஜப்பானில் நடைப்பெற்றதால், இந்த நடைப்பயிற்சி முறையினை ”ஜப்பானிய நடைப்பயிற்சி” (Japanese walking) என புனைப்பெயரிட்டு அழைக்கிறார்கள்.

ஜப்பானிய நடைப்பயிற்சி: நன்மைகள் என்ன?

ஜப்பானிய நடைப்பயிற்சி முறையினை தொடர்ந்து பின்பற்றி வரும் பட்சத்தில், இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது என ஆய்வுக்குழுவில் ஒருவரும், ஷின்ஷீ பல்கலைக்கழக பேராசிரியருமான ஷிசு மசுகி தெரிவித்துள்ளார்.

சுவாசிப்பதில் இருந்த பிரச்சினைகள் இந்த முறையில் நீங்கியுள்ளதாகவும், கொழுப்பு வெகுவாக குறைந்து உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரவும், நிலையான தூக்கம் மற்றும் கவனத்திற்கும் ஜப்பானிய நடைப்பயிற்சி உதவியுள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளார்கள்.

கேட்பதற்கு எளிய பயிற்சியாக தெரிந்தாலும், நடைமுறையில் ஆய்வுக்கு உட்படுத்தும் போது, ஆய்வில் பங்கேற்ற பலரால் ஆரம்பக்கட்டத்தில் அதனை சரியாக செய்யமுடிவில்லை. இந்த நடைப்பயிற்சி சலிப்பூட்டுவதாகவும், மிகவும் கடினமானதாக இருப்பதாகவும் பலர் புகார் அளித்ததாக பேராசிரியர் மசூகி தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய நடைப்பயிற்சி குறித்து நிபுணர்கள் கூறுகையில், நீங்கள் எடுத்த உடனே 30 நிமிட இடைவெளி நடைப்பயிற்சி மேற்கொள்வது கடினமாக இருக்கும் என்பதால், ஆரம்பத்தில் அதனை 15 நிமிடங்களாக பிரித்து ஒரு நாளைக்கு இரண்டு முறை நடந்து பாருங்கள். உங்களின் உடல் இந்த முறையிலான நடைப்பயிற்சிக்கு இணங்கிய பின்,30 நிமிட அதிதீவிர இடைவெளி நடைப்பயிற்சியினை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்குகிறார்கள்.

நீங்கள் எந்த வகையான நடைப்பயிற்சி முறையினை பின்பற்றினாலும், அவை உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அப்புறம் என்ன, இப்போதே நடைப்பயிற்சிக்கான திட்டத்தை வகுத்து நடக்கத் தொடங்குங்கள்.