இந்தியா

போலி சான்றிதழால் சிக்கிய கும்பமேளா பிரபலம்.. கணவர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு!

கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா போஸ்லேவின் திருமண விவகாரத்தில், அவர் மைனர் என்பது உறுதியானதைத் தொடர்ந்து அவரது கணவர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது.

போலி சான்றிதழால் சிக்கிய கும்பமேளா பிரபலம்.. கணவர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு!
Kumbh Mela Monalisa
2025-ஆம் ஆண்டு கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா போஸ்லேவின் திருமண விவகாரத்தில், அவர் மைனர் என்பது உறுதியானதைத் தொடர்ந்து அவரது கணவர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே, கடந்த ஆண்டு கும்பமேளாவில் வைரலாகித் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார். இவர் முகமது ஃபர்மான் என்ற இளைஞரைக் காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த மார்ச் 11-ஆம் தேதி கேரளாவில் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தில் கேரளாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது மோனலிசாவுக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, காவல்துறை அவர்களை ஒன்றாகச் செல்ல அனுமதித்தது.

ஆவண மோசடி மற்றும் தேசிய ஆணையம் கண்டுபிடிப்பு

இந்நிலையில், தேசிய பழங்குடியினர் ஆணையம் நடத்திய அதிரடி விசாரணையில் மோனலிசா 2009-ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது கண்டறியப்பட்டது. திருமணத்தின் போது அவருக்கு 16 வயது மட்டுமே ஆகியிருந்ததும், இதற்காகப் போலியான பிறப்புச் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டது. சட்டப்படி திருமண வயதை எட்டாத ஒரு சிறுமியைத் திருமணம் செய்த குற்றத்திற்காக, மத்தியப் பிரதேச காவல்துறை ஃபர்மான் கான் மீது ஆவண மோசடி மற்றும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

காவல்துறை அதிகாரிகளுக்கு சம்மன்

இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தத் தவறிய கேரளா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலக் காவல்துறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.