அரசியல்

ஒரு மாதம் கெடு? மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவு ஜெட் வேகத்தில் தவெக..!

தமிழக வெற்றிக்கழகத்தில் பல கட்டங்களாக மாவட்டச் செயலாளர்களை நியமித்து வரும் தவெக தலைவர் விஜய், அவர்களுக்கு முக்கிய டாஸ்கை கொடுத்துள்ளதாகவும், அந்த டாஸ்கை நிறைவேற்ற ஒரு மாத கெடு விதித்துள்ளதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் போட்ட உத்தரவு என்ன? இதனை அவர்கள் எவ்வாறு செய்து முடிப்பார்களா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.

ஒரு மாதம் கெடு? மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவு ஜெட் வேகத்தில் தவெக..!
தவெக தலைவர் விஜய்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. இந்த ஓராண்டும், வொர்க் ஃபரம் ஹோம் அரசியலை செய்வதாக விஜய்மீது விமர்சனங்கள் அடுத்தடுத்து எழுந்த நிலையில், பனையூரில் இருந்து பரந்தூருக்கு பறந்து சென்றார் விஜய். இதனைத் தொடர்ந்து, தீவிர அரசியலில் அவர் ஈடுபடத் தொடங்கிய நிலையில், 234 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தை கட்சிரீதியாக 120 மாவட்டங்களாக தவெகவில் பிரிக்கப்பட்டது. இந்த 120 மாவட்டங்களுக்கும் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், பொருளாளர்கள், துணைச் செயலாளர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

பனையூர் அலுவலகத்தில் விஜய்யே நேரில் ஆலோசனை நடத்தி, நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார். இதுவரை ஐந்து கட்டமாக மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தவெகவில் 95 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். அதோடு, ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மாவட்ட இணை செயலாளர், இரண்டு மாவட்ட துணை செயலாளர், ஒரு பொருளாளர், மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் என ஒரு மாவட்டத்திற்கு மொத்தம் 15 மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அதன்படி நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்டச் செயாலாளர்களுக்கு தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு, ஒரு மாதத்திற்குள் நிர்வாகிகளை நியமனம் செய்து அதன் பட்டியலை அனுப்பவும் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

இத்தகைய சூழலில், தவெகவில் சாதி பார்த்து பதவிகள் வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகிகள் சிலர் குற்றச்சாட்டை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். ஆதலால், விஜய்யின் உத்தரவு படி நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு சாதி பார்த்துதான் ஆட்கள் நியமனம் செய்யப்படுவார்களா என்ற சந்தேகம் தவெகவினர் மத்தியில் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், லாபிக்கள் இல்லாமல், நேர்மையான முறையில் நிர்வாகிகளை நியமனம் நடைபெற வேண்டும் என்றும், அதையும்மீறி நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடிகள் நடந்தால் உடனடியாக அவர்கள் கட்சியைவிட்டு நீக்கப்படுவார்கள் என்றும் தவெக தலைவர் விஜய் ஸ்டிரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். 

எனவே, விஜய் கொடுத்துள்ள டாஸ்கை ஒரு மாதத்திற்குள் மாவட்டச் செயலாளர்கள் செய்து முடிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.