அரசியல்

இரவோடு இரவாக அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி.. இதுதான் பிளான்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று இரவு சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரவோடு இரவாக அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி.. இதுதான் பிளான்
அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பணிகளில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும்” என்று கூறினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கபோவதாகவும் பல தகவல்கள் பரவியது.

இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு இன்று இரவு வருகிறார். கூட்டணி குறித்த ஆலோசனை மேற்கொள்வதற்காகவே அமித்ஷா தமிழகத்திற்கு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (ஏப்ரல் 11) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இன்று இரவே சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் கூட்டணி குறித்து பேசப்போவதாகவும் இதுதொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்றும் தகவல் பரவி வருகிறது.