அரசியல்

டெண்டர் விடுவதில் மட்டுமே கவனம் செலுத்திய எடப்பாடி: அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கு!

”மாநிலக் கல்விக் கொள்கையை யாரும் அரசியல் காரணங்களுக்காக விமர்சிக்க வேண்டாம். அதனால் என்ன பயன் என்பதை ஆராய்ந்துவிட்டுப் பேசலாம்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

டெண்டர் விடுவதில் மட்டுமே கவனம் செலுத்திய எடப்பாடி: அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கு!
Anbil Mahesh Claims EPS Focus Was Only on Tenders- Not TamilNadu's Development
தமிழகம் முழுவதும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தனியார் கல்லூரியில் நடைபெற்ற 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமை, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

இதன்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-

11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ஏன்?

"திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் கல்விக்கு அடித்தளம் இட்டு, நல்ல முடிவுகளை எடுக்கத் தொடங்கிவிட்டோம். அந்த அடித்தளத்தின் மீது என்னென்ன செய்ய உள்ளோம்? என்பதைத் தொலைநோக்குப் பார்வையுடன் தெரிவித்துவிட்டோம். தமிழ்நாடு மாநிலக் கல்விக்கொள்கையை அலசி ஆராய்ந்து மற்ற மாநிலங்களும் பின்பற்றினால், மாணவர்கள் உயர்நிலையை அடைவார்கள்.

12ம் வகுப்பு முடித்த மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்த்துள்ளோம். மாணவர்கள் கனவு கண்டால் மட்டும் போதும், அதை நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம் என்று கூறுவதுதான் மாநிலக் கல்விக்கொள்கை. மாணவர்களுக்கு எந்தவித அழுத்தமும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளோம்” என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

மொழியைக் கட்டாயப்படுத்தக் கூடாது:

”தமிழ்நாடு இரு மொழி கொள்கையைத்தான் பின்பற்றும் என முதல்வர் உறுதியாகக் கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அனைத்து மொழிகளையும் படிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எதையும் கட்டாயப்படுத்தக் கூடாது. தமிழ் மொழி, தமிழ்நாடு கலாச்சாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நமக்காகத் தனித்துவமாக உருவாக்கப்பட்டதுதான் மாநிலக் கல்விக்கொள்கை. மாநிலக் கல்விக்கொள்கையை யாரும் அரசியல் காரணங்களுக்காக விமர்சிக்க வேண்டாம். அதனால் என்ன பயன் என்பதை ஆராய்ந்துவிட்டுப் பேசலாம்” என்றார்.

பொருளாதார வளர்ச்சி:

14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை இப்போதுதான் அடைந்துள்ளதாக ஒன்றிய அரசே கூறியுள்ளது. கலைஞர் ஆட்சிக்காலத்தில் 13.12 சதவீதமாக இருந்தது, அதன் பிறகு அதிமுக ஆட்சியில் வெகுவாகக் குறைந்தது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, பொதுப்பணித் துறையையும், நெடுஞ்சாலைத் துறையையும் தன்வசம் வைத்துக்கொண்டு டெண்டர் விடுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் கவனம் செலுத்தவில்லை. ஆனால், தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துகிறார்; விளிம்பு நிலை மக்களுக்காக உழைக்கிறார்" என்றார்.