அரசியல்

மீண்டுமொரு லாக்-அப் மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்-அப் மரணம் நிகழ்ந்துள்ளதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மீண்டுமொரு லாக்-அப் மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!
Nainar Nagendran
திருப்பூர் மாவட்டம், உடுமலை வனத்துறை அலுவலகத்தின் கழிவறையில் விசாரணைக் கைதி மாரிமுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுத்தையின் பல் வைத்திருந்ததாக மாரிமுத்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நயினார் நாகேந்திரன் கண்டனம்

இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார். "திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.

அடுத்தடுத்த மரணங்கள் மற்றும் சந்தேகம்

சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினரால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணச் சுவடு மறையும் முன்னரே மீண்டும் அதே பாணியில் அடுத்த அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுவடையத் தொடங்கியுள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கையா?

மேலும், இந்த வழக்கில் சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், "கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா கடத்தியதாக மாரிமுத்து மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாகவும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் கடந்த 29 ஆம் தேதி நீதிமன்றம் அவரை விடுதலை செய்ததாகவும் செய்திகள் உலா வரும் நிலையில், அன்று மாலையே அவரை வேறு ஒரு வழக்கில் வனத்துறை கைது செய்துள்ளதைப் பார்த்தால், ஏதோவொரு பழிவாங்கும் நடவடிக்கை போலத் தெரிகிறது.

சிபிசிஐடி விசாரணை மற்றும் இழப்பீடு கோரிக்கை

திமுக ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் அதிகரிப்பதையும், அரசு அதிகாரிகள் அதை மூடி மறைக்க முயற்சிப்பதையும் சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், இதுபோன்ற அராஜகங்கள் தொடர்வதை அனுமதிக்க முடியாது என்றார். எனவே, "உயிரிழந்த மாரிமுத்துவின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ள இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமெனவும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.