அரசியல்

அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி.. தொண்டர்கள் பதில் சொல்வார்கள் - திருமாவளவன் எச்சரிக்கை!

"அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைத்துக்கொண்டே, அதை கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி.. தொண்டர்கள் பதில் சொல்வார்கள் - திருமாவளவன் எச்சரிக்கை!
Thirumavalavan
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றி உறுதியாக இருந்தாலும், 'இந்தியா' கூட்டணியின் ஒற்றுமை இந்தத் தேர்தலில் நிரூபணமாகியுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதே சமயம், அதிமுகவை பாஜக கபளீகரம் செய்ய முயற்சிப்பதாவும் அவர் எச்சரித்துள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் தேர்தல்

சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “குடியரசு துணைத் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே வெற்றி பெறுவார் எனத் தெரியும். ஆனால், 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் ஒற்றுமையாகச் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களித்தோம். 752 வாக்குகளில் 300 வாக்குகள் கிடைத்துள்ளன. இது 'இந்தியா' கூட்டணி கட்டுக்கோப்பாக இருப்பதற்குச் சான்றாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ். பாசறையில் வளர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. அம்பேத்கர் மீது அவருக்கு மதிப்புள்ளதால், அம்பேத்கர் எழுதிய சட்டத்தை அவர் பாதுகாக்க வேண்டும். அதற்காக அவரை வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.

பாஜக - அதிமுக உறவு குறித்து திருமாவளவன் விமர்சனம்

“அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைத்துக்கொண்டே, அதை சிதைத்து கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது என்பதை ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தேன். எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக தலைவர்களுக்கு அப்போது என் மீது கோபம் வந்தது. ஆனால், நான் ஐயப்பட்டதுபோலவே, எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன், டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து எனது ஐயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு தலைவரை நீக்கம் செய்த ஒருவரை அமித் ஷாவும், நிர்மலா சீதாராமனும் என்ன துணிச்சலில் சந்தித்தார்கள் என்று கேள்வி எழுகிறது. இதிலிருந்து அதிமுகவையும் அதன் தலைவரையும் பாஜக எப்படி நடத்துகிறது என்பதை அதிமுக தொண்டர்கள் உணர்ந்து கொண்டிருப்பார்கள். இதற்கு மேலும் பாஜகவுடன்தான் கூட்டணி என அதிமுக இருந்தால், தொண்டர்களே பதில் சொல்வார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

விஜய் சுற்றுப்பயணம் மற்றும் கட்சி மறுசீரமைப்பு

"தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் செல்ல அனுமதி மறுத்து இருந்தால் ஏற்புடைதல்ல. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. அந்த வகையில் விஜய் சுற்றுப்பயணம் செல்ல அனுமதி வழங்க வேண்டும். ஆனால் அமைதி மறுப்பதற்கான காரணம் என்ன தெரியவில்லை. அதன் பின்னர் உரிய பதில் சொல்கிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், விசிகவின் மறுசீரமைப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும், 22 ஆயிரம் பேர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். “கட்சியின் கட்டமைப்பை உறுதி செய்த பின்னரே, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் குறித்துத் திட்டமிட முடியும். திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் சுற்றுப்பயணத்துக்குத் திட்டமிட்டு இருந்தாலும், நாங்கள் உடனடியாகக் களத்தில் இறங்க வேண்டிய அவசியமும் கட்டாயமும் இல்லை” என்று கூறினார்.