அரசியல்

207 அரசுப் பள்ளிகள் மூடல்.. அமைச்சரின் விளக்கம் என்ன? இபிஎஸ் கேள்வி

தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளை மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

207 அரசுப் பள்ளிகள் மூடல்.. அமைச்சரின் விளக்கம் என்ன? இபிஎஸ் கேள்வி
Edappadi Palaniswami and Anbil mahesh
ஒரு மாணவர் கூட சேராததால் 207 அரசு பள்ளிகளை மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த நான்கு கல்வி ஆண்டுகளில், கல்வித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டோம், இனி நிகழ்த்துவதற்கு எந்தஒரு சாதனையும் இல்லை என்று தினமும் மார்தட்டிப் பேட்டி அளிக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், இன்று தமிழகத்தில் ஒரு மாணவர்கூட சேராததால் சுமார் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்?

"அமைச்சர் ரசிகர் மன்றத் தலைவராக செயல்படுகிறார்"- இபிஎஸ்

இந்த துறைக்கென்று உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராக மட்டுமே செயல்படுவது வெட்கக்கேடானது. தி.மு.க. ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்காக, தமிழகம் முழுவதும் 207 அரசுப் பள்ளிகளை மூடும் வேலையை இந்த பெயிலியர் மாடல் அரசு கனகச்சிதமாக செய்து வருவதாகவும், பள்ளிகளை மூடுவதாக அறிவித்ததன் மூலம் 207 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வந்த இடங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயல்வதாகவும் கல்வியாளர்கள் இந்த அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

அரசுப் பள்ளிகளை மூடும் அராஜப் போக்கு

நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசு, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக் கணினி, தாலிக்குத் தங்கம் போன்ற நலத் திட்டங்களை நிறுத்தியதோடு, திட்டமிட்டு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல், அப்பாவி மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி ஓடச்செய்து விட்டு அவர்கள் மீதே பழிபோட்டு அரசுப் பள்ளிகளை மூடும் அராஜகப் போக்கை கடைபிடித்து வருகிறது. இச்செயலை, அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அரசின் விளக்கத்துக்கு கண்டனம்

207 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளது குறித்து நான் பேசியதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித் துறை, குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததாலும், பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதாலும், மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடுகிறோம் என்று ஒரு விரோதமான விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

மூடப்பட்ட பள்ளிகளை திறக்க வேண்டும்

இனியாவது பள்ளிக் கல்வித் துறை விழித்துக்கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, மூடப்பட்ட 207 பள்ளிகளின் அருகாமையில் வசித்துவரும் மாணவர்களை, அதே பள்ளிகளில் சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, மாணவர் சேர்க்கையை அதிகரித்து இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று திமுக ஆட்சியை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.