அரசியல்

LGBTQ+ குறித்து கருத்து.. வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்..!

“உள்நோக்கம் ஏதுமின்றி நான் கூறிய கருத்துகள் LGBTQ + தோழர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

LGBTQ+ குறித்து கருத்து.. வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்..!
Thirumavalavan
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, LGBTQ+ குறித்து கருத்து தெரிவித்தது சர்ச்சையானது. மேலும் அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்த நிலையில், தனது பேச்சுக்கு குறித்து திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த பிப்ரவரி 12 அன்று கோவை - வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த "மாணவர் பாராளுமன்றம்" என்னும் நிகழ்வின்போது மாணவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு விடையளித்தேன். அதில் ஒரு மாணவர் எழுப்பிய வினாவுக்கு நான் அளித்த விடை, பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி அமைந்துவிட்டதாக அறிந்து வேதனைப்படுகிறேன். உள்நோக்கம் ஏதுமின்றி நான் கூறிய அக்கருத்து அவர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2006-ல் சட்டப் பேரவையில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான், திருநங்கையருக்கான நலவாரியம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. ஒரு அரசியல் கட்சியில் திருநங்கையருக்கென அணி ஒன்றை உருவாக்கிய சிறப்பும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கே உண்டு. எப்போதும் LGBTQ + தோழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற, அவர்களுக்கு இன்னல் நேரும்போதெல்லாம் ஆதரவாய் நிற்கிற கட்சியே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகும்.

எனவே, எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ+ பாலின வகையினர் உள்ளிட்ட அனைத்து விளிம்புநிலை சமூகத்தினரின் நலன்களுக்காகப் போராடும் இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதைக் கருத்தில் கொண்டு, அத்தோழர்கள் இதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.