அரசியல்

"ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வைக்கும் இயக்கம் தேமுதிக அல்ல"- பிரேமலதா திட்டவட்டம்!

"ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வைக்கும் இயக்கம் தேமுதிக அல்ல" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Premalatha Vijayakanth
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து முக்கியத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று (நவம்பர் 25) சென்றிருந்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "வரவிருக்கும் ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் தே.மு.தி.க.வின் மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O' என்ற பெயரில் நடத்தப்படும் அந்த மாநாட்டில், எங்களின் கூட்டணி நிலைப்பாடு குறித்துத் தெளிவான முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.

ராஜ்யசபா சீட்டுக்காகக் கூட்டணி இல்லை

மேலும், கட்சியின் நிலைப்பாடு குறித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. வலுவாக இருக்கிறது. 2026 தேர்தல் மட்டுமின்றி, அதற்கு அடுத்து நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

முக்கியமாக, "வெறுமனே ராஜ்யசபா சீட்டுக்காகக் கூட்டணி வைக்கும் இயக்கம் இந்த தேமுதிக கிடையாது. தொண்டர்கள் விரும்பும், மக்கள் விரும்பும் கூட்டணியை வலுவாக அமைப்போம்" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கடந்த மக்களவை தேர்தல் கூட்டணி

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீட் ஒதுக்கப்படாததால் எடப்பாடி பழனிசாமியுடன் பிரேமலதாவுக்கு மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.