அரசியல்

அரசியலில் யாரும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க முடியாது- ஆர்.எஸ்.பாரதி பளீச்

தி.மு.க தலைமைக்கு அப்போதும் இப்போதும் உறுதுணையாக இருந்து எதிர்க்கட்சிகள் வீசும் விமர்சன பந்துகள் அனைத்தையும் சிக்ஸராக அடித்து துவம்சம் செய்வதில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நிகர் யாருமில்லை.

அரசியலில் யாரும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க முடியாது- ஆர்.எஸ்.பாரதி பளீச்
DMK Organizing Secretary RS Bharathi Exclusive interview
நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தி.மு.க ஆட்சி குறித்தும் அரசியல் நிலவரம் குறித்தும் ரிப்போர்ட்டர் இதழுக்காக ஆர்.எஸ்.பாரதியுடன் உரையாடினோம்.

'நான்காண்டு ஆட்சியில் தி.மு.க அரசு எதையுமே செய்யவில்லை. இதுவொரு நிர்வாகத் திறமையற்ற அரசு' என எடப்பாடி விமர்சிக்கிறாரே?

எடப்பாடி பழனிசாமி எந்தக் காலத்திலுமே உண்மையைப் பேசியதே கிடையாது. இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவதுதான் அவருடைய வாடிக்கை. தன்னை முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவைத்த சசிகலாவையே துரோகி என்று சொன்னவர்தானே அவர்! அப்படியிருக்க, எடப்பாடி சொல்லும் கருத்துகளையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மாதந்தோறும் குடும்பத் தலைவிகள் ஆயிரம் ரூபாய் வாங்குவதெல்லாம் எடப்பாடியின் கண்களுக்குத் தெரியவில்லையா? விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் பற்றியெல்லாம் எடப்பாடியை மக்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளச் சொல்லுங்கள். எடப்பாடி ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 3.25 ஆகத்தான் இருந்தது. இன்றைக்கு 9.69 ஆக அது வளர்ந்திருக்கிறது. எடப்பாடி ஆட்சியைக் காட்டிலும் 200 மடங்கு வளர்ச்சியடைந்து இருக்கிறது தமிழ்நாடு சராசரி புத்தி உள்ளவன் கூட இதெல்லாம் சொல்லுவான்.

அப்படியென்றால், சட்டம் ஒழுங்கு உட்பட எல்லாம் சரியாக இருக்கிறது... ஆட்சி மீது மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை என்கிறீர்களா?

எடப்பாடி ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னையே இல்லையா? கடந்த 12 ஆண்டுகாலத்தில் இப்போதுதான் தமிழகத்தில் குறைவான குற்றங்கள் நடக்கிறது என்று எங்களுக்கு எதிர்ப்பாக இருக்கிற மத்திய அரசே எங்களுக்கு சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறது. இதையெல்லாம் எடப்பாடி படித்து தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகம் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதென தெரியும்.

அதேபோல, தி.மு.க ஆட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி இல்லாமல் இருக்காது. நூறில் முப்பது சதவிகிதம் பேர் அதிருப்தியிலும், எதிர்ப்பாகவும் இருக்கலாம். அரசியலில் யாரும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க முடியாது. காந்தியை சுடுவதற்கே இங்கு ஒரு கோட்சே இருந்தார் அல்லவா.! அப்படியென்றால் காந்தி கெட்டவர் என்று அர்த்தமா என்ன?

புதுக்கோட்டை வடகாடு கிராம மோதல் விவகாரத்தில் காவல்துறை ஒரு சார்பான போக்கை கையாள்வதாக திருமா குற்றம் சாட்டுகிறாரே?

நான்கு நாட்களுக்கு முன்புதான் திருமா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரைச் சந்தித்து, பேட்டி கொடுத்துவிட்டுப் போனார். வடகாடு விவகாரத்தில் ஏதாவது அவருக்கு குறை இருந்திருந்தால் அவர் முதல்வரை சந்தித்த பிறகு வெளிப்படுத்தியிருக்க மாட்டாரா? அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க சார்பில் பெறப்பட்ட கையெழுத்துக்கள் எங்கே என சீமான் கேட்கிறாரே?

சீமானை ஜனாதிபதி மாளிகைக்குப் போய் கேட்டு தெரிந்துகொள்ளச் சொல்லுங்கள். நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியதோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருக்கிறது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆளுநர் விவகாரத்தில் எப்படி இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு தீர்ப்பை வாங்கினோமோ, அதேபோன்றதொரு தீர்வை நீட் தேர்வுக்கும் பெறுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு வழங்காதது ஏன்?

நீதிமன்றத்தினுடைய கேள்வி இது. நீதிமன்றத்தில் இதற்கு அரசு பதில் சொல்லும். இது அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. நிர்வாகம் சம்பந்தப்பட்டது. எனவே, சம்பந்தப்பட்ட டி.ஜி.யியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், அவர் அதற்கு பதில் சொல்வார்.

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தி.மு.கவுக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கும் என்கிறார்களே?

இந்தக் கூட்டணியை எல்லாம் சந்தித்துதானே நாங்கள் 2021ல் ஆட்சிக்கு வந்தோம். பிரிந்தவர்கள் கூடியிருக்கிறார்கள், அவ்வளவுதான். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் கூட்டணி சேர்ந்திருப்பது எங்களுக்கு ப்ளஸ் தான். இரண்டு பேரும் எப்படி எப்படியெல்லாம் கடந்த காலங்களில் பேசினார்கள் என்பதை மக்கள் பார்த்தார்கள். இந்தக் கூட்டணி உருவானதில் அ.தி.மு.கவின் கீழ்மட்டத் தொண்டர்களே அதிருப்தியில் இருக்கிறார்கள். எனவே, பா.ஜ.க அதிமுக கூட்டணி சேர்ந்ததில் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. மகிழ்ச்சிதான்.

விஜய்யின் வருகையும் அவருக்குக் கூடும் கூட்டமும் தி.மு.கவின் தூக்கத்தைக் கெடுத்திருப்பதாகச் சொல்கிறார்களே?

கடந்த 75 வருடங்களில் இதைவிட பெரிய கூட்டத்தை எல்லாம் பார்த்தவர்கள் நாங்கள். 1980-ல் நாராயணசாமி நாயுடுவுக்கு கூடாத கூட்டமா? விஜயகாந்துக்கு கூடாத கூட்டமா? எங்கள் மேல் எங்களுக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது.

விஜய்யைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. 100க்கு 70 சதவிகித மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மீதமிருக்கிற 30 சதவிகித மக்களின் ஆதரவைப் பெறுவது யார் என்பதில்தான் இப்போது போட்டியே இருக்கிறது. அந்தக் களத்தில் ஒருவராகத்தான் விஜய்யை நாங்கள் பார்க்கிறோம்.

செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சரவையில் இருந்து நீக்கம், துரைமுருகனின் இலாகா மாற்றத்தை அமைச்சர்கள் மீதான அதிருப்தியாக புரிந்துகொள்ளலாமா?

நீதிமன்ற ஆணைக்கு ஏற்பத்தான் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட்டார். பொன்முடி விவகாரத்தில் பூதாகரமாக போக வேண்டாம் என்பதால் அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட்டார். இப்போது துரைமுருகனுக்கு இலாகா மாற்றம்தான் செய்யப்பட்டிருக்கிறது. இது அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அல்ல, ப்ரமோஷன். சட்டத்துறை ஏற்கெனவே துரைமுருகன் வகித்ததுதான். தேர்தலுக்கு இன்னும் ஒருவருடம் தான் இருக்கிறது. துரிதமாக சில நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் இப்படியான முடிவுகளையும், மாற்றங்களையும் செய்கிறார். மற்றபடி அதிருப்தி எதுவும் இல்லை.

(நேர்காணல்/கட்டுரை: நவீன் இளங்கோவன், புகைப்படம்: ம.செந்தில்நாதன் ; குமுதம் ரிப்போர்ட்டர், 16.05.2025)