அரசியல்

"திமுகவை நம்பாதீர்கள்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை"- அனல் பறந்த விஜய் பேச்சு!

புதுச்சேரி அரசுக்கும், முதல்வருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாராட்டு தெரிவித்தார்.


TVK Vijay
புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று (டிசம்பர் 9) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் விஜய், திமுகவைக் கடுமையாகச் சாடியதுடன், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய அரசுக்கு எதிராகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மக்கள் கூட்டமும் விஜய்யின் வருகையும்

காலை முதலே கூட்டம் நடைபெற்ற துறைமுக வளாகத்தில் தொண்டர்கள் திரளத் தொடங்கினர். கியூஆர் கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டு, 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டபோதும், பாஸ் இல்லாத தொண்டர்கள் அதிக அளவில் கூடினர். இதனால் போலீசார் லேசான தடியடியை நடத்தி கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்னை பனையூர் இல்லத்தில் இருந்து கார் மூலமாகப் புறப்பட்ட விஜய், சுமார் 10.30 மணியளவில் வருகை தந்தார். என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசிய பிறகு விஜய் தனது உரையைத் தொடங்கினார்.

தமிழகம் - புதுச்சேரி உறவு குறித்த பேச்சு

விஜய் தனது உரையில், ஒன்றிய அரசுதான் தமிழ்நாடு தனிமாநிலம், புதுச்சேரி தனி யூனியன் பிரதேசம் என்று பிரித்துப் பார்க்கும் என்றும், ஆனால் நமக்கெல்லாம் அப்படி இல்லை, நாம் வேறு வேறு கிடையாது, நாம் எல்லாம் ஒன்றுதான், நாம் எல்லாம் சொந்தம்தான் என்றும் உணர்வுபூர்வமாகப் பேசினார். வேறு வேறு வீட்டில் வேறு வேறு மாநிலத்தில் இருப்பதால் நாம் சொந்தம் இல்லை என்று ஆகிவிடாது என்றும், ஒருவரை ஒருவர் பார்க்கும்போது அந்த உணர்வு இருந்துவிட்டால் போதும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மட்டுமல்லாமல் உலகின் எந்த மூலையில் நம் வகையறா இருந்தாலும் அவர்கள் எல்லாம் நம் உறவுதான், நம் உயிர்தான் என்று அவர் குறிப்பிட்டார். புதுச்சேரி என்றதும் மணக்குளம் விநாயகர், அரவிந்தர் ஆசிரமம், வில்லியனூர் மாதா மற்றும் மகாகவி பாரதி இருந்த மண், பாவேந்தர் பாரதி பிறந்த மண் எனச் சிறப்புகளை அடிக்கிக்கொண்டே போகலாம் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

திமுக மற்றும் மத்திய அரசு மீதான விமர்சனங்கள்

"1977-ல் எம்ஜிஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார். ஆனால், 1974-லேயே புதுச்சேரியில் ஆட்சி அமைத்துவிட்டார். 'எம்ஜிஆர் நமக்கானவர், அவரை மிஸ் பண்ணிடாதீங்க' எனத் தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை செய்ததே புதுச்சேரி தான்" என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு மனப்பூர்வ நன்றி தெரிவித்த விஜய், வேறு ஒரு கட்சியின் நிகழ்ச்சிக்கு அவர் பாரபட்சம் காட்டவில்லை என்றும், இதைப் பார்த்தாவது திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும், ஆனால் கற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், தேர்தலில் மக்கள் கற்றுக் கொடுப்பார்கள் என்றும் பேசினார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை என்றும், மாநில அந்தஸ்து கேட்டுப் பலமுறை சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியும் இதுவரை கொடுக்கவில்லை என்றும் மத்திய அரசை சாடினார். மேலும், வேலைவாய்ப்புகளை உருவாக்காதது, ஐடி கம்பெனிகளை உருவாக்காதது, 200 நாட்களாக ஒரு அமைச்சருக்கு இலாகாவே ஒதுக்காதது, காரைக்கால் மொத்தமாகக் கைவிடப்பட்ட பகுதியாக இருப்பது போன்ற மத்திய அரசின் குறைகளையும் அவர் அடுக்கினார்.

உள்ளூர் குறைகள் மற்றும் வாக்குறுதி

புதுச்சேரியில் போதிய அளவில் பார்க்கிங் வசதிகள் இல்லை என்றும், போதிய கழிப்பிட வசதிகள் இல்லை எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த விஜய், புதுச்சேரிக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றும், நிதி ஒதுக்காததால் கடன் வாங்கு வேண்டிய சூழல் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் ரேஷன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, புதுச்சேரி மக்களுக்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன், திமுகவை நம்பாதீர்கள் என்று அறிவுறுத்திய அவர், புதுச்சேரி மக்களுக்காக இந்த விஜய் எப்பவும் துணை நிற்பான் என்றும், சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி புதுச்சேரியில் வெற்றிக் கொடியுடன் பறக்கும் என்றும் பேசி தனது உரையை நிறைவு செய்தார்.