அரசியல்

அதிமுக - பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல் அல்ல.. நயினார் நாகேந்திரன் அதிரடி!

அதிமுகவுடன் பாஜக அமைத்துள்ள கூட்டணி மூழ்கக்கூடிய கப்பல் அல்ல, பறக்கப்போகும் பெரிய ஜெட் விமானம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல் அல்ல.. நயினார் நாகேந்திரன் அதிரடி!
அதிமுக பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல் அல்ல.. நயினார் நாகேந்திரன் அதிரடி!
அதிமுகவுடனான கூட்டணிகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "அதிமுக - பாஜக கூட்டணி மூழ்கக்கூடிய கப்பல் அல்ல; 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் பறக்கக்கூடிய பெரிய ஜெட் விமானம்," என்று தெரிவித்தார்.

தூத்துக்குடியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே கூட்டணி குறித்து முடிவெடுக்கும் போதே, அதிமுகவின் உட்கட்சிப் பிரச்னை குறித்து அவர்கள்தான் பேச வேண்டும் எனத் தெளிவாகக் கூறிவிட்டார். அது அவர்களது பார்வை. பாஜக ஒரு தேசியக் கட்சி; திமுக ஒரு குடும்பக் கட்சி. திமுகவின் தனிப்பட்ட கட்சியில் வாரிசு இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கருத்து," என்று அவர் கூறினார்.

மேலும், தனது மகன் நயினார் பாலாஜிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஏற்கனவே எனது மகன் இளைஞரணி மாநில துணைத்தலைவராக இருந்தார். அதன் அடிப்படையிலேயே அவருக்குக் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவில் குடும்ப அரசியல் இல்லை,” என்று விளக்கமளித்தார்.

சிறுபான்மையினருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லையென அலிசா அப்துல்லா கூறியது குறித்து, “சிறுபான்மையினருக்கு கட்சிப் பதவி கொடுக்கவில்லை என்பது தான் அவரது குற்றச்சாட்டு . இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பாஜகவில் பல பொறுப்புகளில் உள்ளனர்,” என மறுப்பு தெரிவித்தார். மேலும், "சமூக நீதி பற்றிப் பேசும் எல்லா உரிமையும் பாஜகவுக்குத்தான் உள்ளது. திரௌபதி முர்மு, அப்துல் கலாம் உள்ளிட்டோரை குடியரசுத் தலைவராக நியமித்தது பாஜக தான்," என்று அவர் குறிப்பிட்டார்.

விஜய்யின் அரசியல் பயணம்குறித்து, “இந்தியா ஒரு சுதந்திர நாடு என்பதால் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் சுற்றுப்பயணம் செய்கிறார், அதில் தவறு இல்லை,” என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.