அரசியல்

விஜய் யார் வாக்குகளை பிரிப்பார் என்று தெரியாது? MP கார்த்தி சிதம்பரம் பேட்டி

’ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருப்பதாகவும், அதனை முன்வைத்துதான் விமர்சனம் செய்வார்கள் என்றும், ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறு கிடையாது என்றும்’ எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

விஜய் யார் வாக்குகளை பிரிப்பார் என்று தெரியாது? MP கார்த்தி சிதம்பரம் பேட்டி
Karti Chidambaram thoughts about TVK Vijay Electoral Prospects
புதுக்கோட்டை: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். காவல்துறையில் உடனடியாக மறுசீரமைப்பு தேவை என்றும், டிஜிபி முதல் காவலர் வரை அனைவருக்கும் மறுபயிற்சி வழங்கினால் மட்டுமே அஜித் குமார் கொலை போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் என்றும், இல்லையெனில் இது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். பேட்டியில் தெரிவித்த சில முக்கிய கருத்துகள் பின்வருமாறு-

கும்பாபிஷேக சர்ச்சை:

தமிழக அரசியலில் கட்சித் தலைவர்கள் ஒருவருக்கொருவர் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பிரச்சாரங்கள் செய்வது வேதனைக்குரியது என்று குறிப்பிட்ட கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்சியில் இதுபோன்ற பிரச்சாரங்கள் யாரும் செய்ய மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

சமுதாயத்தில் இன்னும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாகவும், மக்களைப் பிறப்பால் பிரித்துப் பார்ப்பது வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார். கும்பாபிஷேக விழாவில் செல்வப்பெருந்தகைக்கு நடந்த சம்பவங்கள் குறித்து அறநிலையத்துறை விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி:

தற்போதைய ஆட்சிக்காலம் "இருண்ட காலம்" என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது சரியல்ல என்று கார்த்தி சிதம்பரம் விமர்சித்தார். "அவர் மூன்று தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியைத் தழுவியுள்ளார். அவர் நான்காவது தேர்தலிலும் தோல்வியைத் தழுவ உள்ளார். எதையாவது ஒன்றை உருட்டிப் புரட்டிப் பார்க்கலாம் என்று செயல்படுகிறார்" என்று கூறினார்.

பத்தாண்டுகள் அதிமுக ஆட்சி செய்தபோது தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை என்ற காரணத்தால்தான் ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தினார்கள் என்றும், அதனால் மீண்டும் மக்கள் அதிமுகவை நோக்கிச் செல்வார்கள் என்று தான் நம்பவில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். மேலும், அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் பயணம் செய்வதால் நிச்சயமாக தமிழ்நாடு மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோயிலை விட கல்விக்குத்தான் அதிக செலவு:

அறநிலையத்துறை நிதியை கல்லூரி கட்ட பயன்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துகள் சர்ச்சையானது. அதுக்குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் பழனி கோயிலில் அறங்காவலராக இருந்துள்ளேன். பழனி கோயில் பெயரிலேயே கல்லூரி உள்ளது. பழனி கோயில் அறக்கட்டளையே கல்லூரியை நடத்தியுள்ளது. அப்போது கோயிலில் வந்த நிதியை வைத்துதான் கல்லூரிக்கு பணம் கொடுத்தோம். கல்விக்காக கோயில் நிதியை செலவு செய்வது தவறு என்று சொல்வதை ஏற்க முடியாது. கோயிலை விட கல்விக்குத்தான் அதிக செலவை செய்ய வேண்டும்" என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

2026 தேர்தல் களம் எப்படி?

2026 தேர்தல் நான்கு முனையாக இருக்கலாம் என்று கணித்த கார்த்தி சிதம்பரம், "சீமானை நீங்கள் அணியாக பார்க்கிறீர்கள் நான் தனியாக அவரைப் பார்க்கிறேன்" என்றார். "விஜய்க்கு என்று ஒரு எனர்ஜி இருக்கிறது. அவருக்கென்று ஒரு வரவேற்பு ஒரு பகுதியில் இருக்கிறது. ஆனால் அது சீட்டுகளாக மாறுமா? என்று தெரியவில்லை. இன்று இருக்கும் நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான 'இந்தியா கூட்டணி' வெற்றி பெறும்" என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், “மூன்றாவது அணியாக இருப்பவர்கள் யார் யாருடைய வாக்கை எடுக்கிறார்கள் என்று தெரியாது. விஜய்க்கு வாக்கு விழும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவர் யார் வாக்கை பிரிப்பார் என்பது தெரியவில்லை. எப்போதுமே தமிழ்நாட்டில் அதிமுகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். அந்த வாக்கு பெரும்பான்மையாக விஜய்க்கு செல்லலாம். ஏற்கனவே ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கக்கூடிய உறுதியான வாக்குகள் விஜய்க்கு செல்லுமா? என்று தெரியவில்லை" என்று சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.