அரசியல்

கரூர் நெரிசல் வழக்கு: தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு!

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் நெரிசல் வழக்கு: தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு!
3 special forces formed to arrest TVK General Secretary Anand
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான விவகாரம் தொடர்பாக, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை பிடிக்கக் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரத் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளன.

தலைமறைவான ஆனந்த்: தேடுதல் தீவிரம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

முதற்கட்டமாக, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமறைவாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, ஏற்காட்டில் உள்ள மலை கிராமத்தில் ஆனந்த் தங்கியிருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில், அவரை கைது செய்வதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்காடு மட்டுமின்றி சென்னையிலும் ஆனந்தை தேடும் பணியைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

முன்ஜாமீன் மனு விசாரணை

இதனிடையே, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க என். ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.03) விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.