அரசியல்

கரூர் துயரம்.. முன்ஜாமின் கோரி என்.ஆனந்த், நிர்மல் குமார் மனு தாக்கல்!

கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கரூர் துயரம்.. முன்ஜாமின் கோரி என்.ஆனந்த், நிர்மல் குமார் மனு தாக்கல்!
N. Anand, Nirmal Kumar file petition seeking anticipatory bail
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27 ஆம் தேதி கரூரில் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகள்

இந்தச் சம்பவம் குறித்துக் கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலர் மதியழகன் ஆகியோர் மீது மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்படியாமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் மத்திய மாநகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்ஜாமீன் மனு

தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வரும் பரபரப்பான சூழலில், இன்று தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தங்களைக் கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்கள் தரப்பு வாதத்தில், "நாங்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினோம். காவல்துறையினர் உரிய பாதுகாப்புகளைச் செய்யவில்லை. எனவே, இந்த வழக்குப் பதிவு உள்நோக்கம் கொண்டது," என்று தெரிவித்துள்ளனர். மேலும், "நாங்கள் நீதிமன்றம் விதிக்கக் கூடிய கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படுகிறோம். எனவே எங்களைக் கைது செய்வதில் இருந்து விலக்களித்து முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

முன்னதாக நேற்று, தவெக நீதிமன்றத்தை நாடியபோது, செவ்வாய்க்கிழமை அன்றுதான் மனு தாக்கல் செய்ய முடியும் என நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.