அரசியல்

கூட்டணியிலிருந்து விலகியதற்குக் காரணம் நயினார் நாகேந்திரனே! டிடிவி தினகரன்

"எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் தூக்கிப் பிடித்ததுதான் அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு காரணம்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

கூட்டணியிலிருந்து விலகியதற்குக் காரணம் நயினார் நாகேந்திரனே! டிடிவி தினகரன்
TTV Dhinakaran and Nainar Nagendran
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கடந்த 3-ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தங்கள் முடிவிற்கான காரணங்களையும், எதிர்கால அரசியல் நகர்வுகளையும் குறித்துப் பேசினார்.

கூட்டணியிலிருந்து விலகியது ஏன்?

"பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம். ஆனால், எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் தூக்கிப் பிடித்ததுதான் அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு காரணம். அவர் உள்ளொன்று வைத்துக்கொண்டு வெளியில் வேறுவிதமாகப் பேசுகிறார். அத்துடன், எடப்பாடி பழனிசாமியைப் போதுமென அவர் நினைக்கிறார். அகங்காரத்துடன், ஆணவத்துடன் நயினார் நாகேந்திரன் செயல்பட்டார்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும், தன்னை இந்தக் கூட்டணியில் இணைத்தது முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என்றும், அவர் நடுநிலையோடு செயல்பட்டார் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

ஓபிஎஸ்-க்கு ஆதரவு; பழனிசாமிக்கு எதிர்ப்பு

"அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு யார் மீதும் எனக்குக் கோபமும், வருத்தமும் இல்லை. துரோகம் செய்த பழனிசாமி எங்களைச் சந்திக்கவே தயங்குகிறார். அவரை முதல்வர் வேட்பாளராக எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பழனிசாமியை எதிர்த்துத் தொடங்கியதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். ஓ. பன்னீர்செல்வத்துடன் பேசத் தயார் என நயினார் நாகேந்திரன் மனமில்லாமல் கூறுகிறார். எனக்காக தேனி தொகுதியை விட்டுக்கொடுத்தவர் ஓ. பன்னீர்செல்வம். அவருக்காக நான் பேசாமல் வேறு யார் பேசுவார்கள்?" என்று அவர் கூறினார்.

சட்டமன்ற தேர்தல் கூட்டணி

"விரைவில் செங்கோட்டையனை சந்திப்பேன். நீங்கள் நினைக்காத கூட்டணி ஒன்று அமையப் போகிறது. நாங்கள் இருக்கும் கூட்டணிதான் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறப் போகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுக பின்னடைவைச் சந்திக்கும்" என்று தினகரன் உறுதியாகத் தெரிவித்தார். மேலும், தான் தமிழாக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கப்போவதாக வெளியான தகவல்கள் ஊடக வியூகம் எனவும், தனக்கு நடிகர் விஜய் மீது பொறாமை இல்லை எனவும் அவர் விளக்கமளித்தார்.