அரசியல்

அமைச்சர் பொன்முடி பேசியது கருத்து சுதந்திரமா? பதவி நீக்கம் செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி பேசியது கருத்து சுதந்திரமா? பதவி நீக்கம் செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு
petition filed in chennai high court seeking removal of ponmudi from ministerial post
திராவிட கழகம் சார்பில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுகவின் கட்சி பொறுப்பில் இருந்து பொன்முடி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்கக் கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறியுள்ளார்.

பொன்முடியின் பேச்சு, கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது எனவும், குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்கள் அளித்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பதவி பிரமாணத்தை மீறி செயல்பட்ட அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more:Chennai Rains: 10 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்.. சென்னை கனமழை குறித்து வெதர்மேன் ட்வீட்