அரசியல்

நெருப்பில்லாமல் புகையாதே.. விஜய்யின் தவெகவில் அருண்ராஜ் இணைகிறாரா?

தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் ஆலோசனைகளை அருண் ராஜ் IRS வழங்கி வருகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவரது விருப்ப ஓய்வு முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் தவெகவில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்கிற பேச்சு எழுந்துள்ளது.

நெருப்பில்லாமல் புகையாதே.. விஜய்யின் தவெகவில் அருண்ராஜ் இணைகிறாரா?
President of India to accept the resignation K.G.Arunraj from Indian Revenue Service
நீண்ட காலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, அருண் ராஜ் IRS ஆலோசனை வழங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வந்தன. திமுக மற்றும் பாஜக போன்ற கட்சியில் அங்கம் வகித்த திருச்சி சூர்யா கடந்த ஜன.,6 ஆம் தேதி, தனது சமூக வலைத்தளத்தில் இதுக்குறித்து பதிவு ஒன்றினை இட்டார். அதில் மத்திய அரசில் பணி செய்யும் ஒருவர், ஒரு அரசியல் கட்சிக்கு ஆலோசகராக இருப்பது எப்படி? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அப்போது முதலே அருண்ராஜ் IRS அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்பட தொடங்கினர். யூகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், தன்னுடைய பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற அரசுக்கு கடிதம் வழங்கினார் அருண்ராஜ். தற்போது அவருடைய விருப்ப ஓய்வு முடிவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Image

இதனைத் தொடர்ந்து விரைவில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு வெளிப்படையாக அரசியல் நகர்வுகளை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கலாம். மேலும், கட்சியில் மிக முக்கிய பொறுப்புகளான இணை அல்லது துணை பொது செயலாளராக முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ் நியமிக்கப்படலாம் எனவும் அரசல்புரசலாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி மாதமே.. போட்டுடைத்த திருச்சி சூர்யா:

நெருப்பில்லாமல் புகையாதே என்பதை போல் கடந்த ஜனவரி மாதம் திருச்சி சூர்யா பதிவிட்ட பதிவு தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அந்த பதிவின் விவரம் பின்வருமாறு-

“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக அருண் ராஜ் IRS செயல்படுகிறாரா ?

தமிழக வெற்றி கழகத்தில் தலைவர் விஜய் அவர்களின் ஆலோசர்களாக இருவர் இருப்பதாக செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன. ஒருவர் 2016-ல் *மாற்றம் முன்னேற்றம் அன்புமணி* என்று பாமகவிற்கு வேலை செய்த ஜான் ஆரோக்கியசாமி. தொண்டர்களுக்கு தெரியவில்லை என்றாலும் அரசியல் விமர்சகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இவர்தான் அவருக்கு வேலை செய்கிறார் என்பது தெரியும்.



அறியாத ஒரு செய்தி இந்த ஜான் ஆரோக்கியசாமியை அழைத்து வந்தவர் தற்போது மத்திய அரசு பணியில் வருமானவரித்துறையில் துணை ஆணையராக இருக்கும் அருண்ராஜ் IRS என்பது. மத்திய அரசில் பணி செய்யும் ஒருவர், ஒரு அரசியல் கட்சிக்கு ஆலோசகராக இருப்பது மட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளை தமிழக வெற்றி கழகத்தை எடுக்க வைத்தது இந்த அருண்ராஜ் IRS என்ற அதிர்ச்சியான தகவலும் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பணி செய்வது மத்திய அரசிற்கு தெரியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நடிகர் விஜய்க்கு நன்கு பரிட்சயமான இவரை அணுகி தான் ஜான் ஆரோக்கியசாமி தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசராக நியமிக்கப்பட்டு சுமார் 11 கோடி ரூபாய் வரை வாங்கி இருக்கிறார் என்ற செய்தியும் நமக்கு வந்துள்ளது. நடிகர் விஜய் களத்திற்கு வராமல் பனையூர் அரசியல் செய்வதற்கு மிக முக்கியமான காரணமானவர்கள் இந்த இருவர்தான் என்று தவெக நிர்வாகிகளே புலம்புகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாததற்கும் ஜான் ஆரோக்கியசாமி தான் காரணம் என்று தெரிந்துள்ளது!” என குறிப்பிட்டு இருந்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7,8 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது என்றே சொல்லலாம்.