அரசியல்

பிரிந்து சென்றவர்களை 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும்.. இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கெடு!

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பிரிந்து சென்றவர்களை 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும்.. இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கெடு!
Edappadi Palaniswami and Sengottaiyan
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு நிலவிவந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கட்சி அலுவலகத்துக்குப் பிரசார வாகனத்தில் இன்று காலை செங்கோட்டையன் வருகை தந்தார். அப்போது, வாகனத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து, ஆதரவாளர்கள் மத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்" என்று கூறினார்.

'அதிமுகவில் என்னுடைய பயணம்'

"அதிமுகவில் தனது பயணம் குறித்துப் பேசிய செங்கோட்டையன், "கடந்த 1972-ஆம் ஆண்டு கட்சி தொடங்கியபோதே கிளைக் கழகத்தை தொடங்கி எனது பணியை ஆரம்பித்தேன். என்னை பொருளாளராக நியமித்து கோவை பொதுக்குழுவை நடத்தச் சொன்னவர் எம்ஜிஆர். அதனை சிறப்பாக நடத்தியதற்காக என்னை மனதாரப் பாராட்டினார். சத்தியமங்கலம் தொகுதியில் என்னை போட்டியிட வைத்தார். என்னுடைய பெயரைச் சொன்னால் மட்டும் போதும் தேர்தலில் வெற்றி பெறலாம் என்றார் எம்ஜிஆர். இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியை அவர் நடத்தினார். எம்ஜிஆருக்குப் பிறகு, உலகமே திரும்பிப் பார்க்கும் சிறந்த ஆட்சியை ஜெயலலிதா அளித்தார். விமர்சித்த தலைவர்களையும் அரவணைத்த ஆளுமை மிக்க தலைமை அவர்" என்றார்.

'ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு..'

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்கு பல்வேறு சோதனைகள் வந்தபோது, இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக, அனைவரும் ஒருமனதாக சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தோம். பின்னர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியை சசிகலா முதல்வராக முன்மொழிந்தார். "எனக்கு இரண்டு வாய்ப்புகள் வந்தபோதும், இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக நான் அமைதியாக இருந்தேன். அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சிக்காக அனைத்து தியாகங்களையும் செய்துள்ளேன்" என செங்கோட்டையன் கூறினார்.

இபிஎஸ்-க்கு வலியுறுத்திய கோரிக்கைகள்

"2016-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, 2019, 2021, 2024 என நாம் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் பல்வேறு சவால்களை சந்தித்தோம். 2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என நானும், வேலுமணியும் வலியுறுத்தினோம். கட்சி தொய்வோடு இருப்பதை எடுத்துரைத்து, வெளியே சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என வலியுறுத்தினோம். ஆனால், இந்தக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை. வெளியே சென்றவர்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் மீண்டும் சேரத் தயாராக இருக்கின்றனர்" என்று அவர் குறிப்பிட்டார்.

இபிஎஸ்-க்கு காலக்கெடு

அனைவரையும் அரவணைத்து கட்சியில் சேர்த்தால் மட்டுமே நல்லாட்சியைத் தமிழகத்தில் தர முடியும். பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே பொதுச்செயலாளரின் பிரசாரத்தில் பங்கேற்பேன். இல்லையென்றால், ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம். பிரிந்தவர்களை இணைக்கும் பணிகளை நாங்களே மேற்கொள்வோம்" என செங்கோட்டையன் தெரிவித்தார்.