அரசியல்

நான் சொன்னா சொன்னதுதான்... இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது.. மாஸ் காட்டிய உதயநிதி ஸ்டாலின்!

திமுகவின் கடைசி தொண்டனும், தமிழனும் இருக்கும் வரை தமிழையும், தமிழனையும், திராவிடத்தையும் தொட்டு கூட பார்க்க முடியாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நான் சொன்னா சொன்னதுதான்... இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது.. மாஸ் காட்டிய உதயநிதி ஸ்டாலின்!
இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது.. மாஸ் காட்டிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டத்துடன், இந்தி மாத நிறைவு நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தவறாக பாடப்பட்டது. அதாவது பாடலை பாடியவர்கள், தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி தெரியாமல் திக்கி நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதற்கு பல தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்” என கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். மேலும் இச்சம்பவம் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் இந்தியை நேரடியாகத் திணிக்க முடியாததால், தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்கியிருக்கின்றனர் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற நிலை இருந்தது. அண்ணா, பெரியார், கருணாநிதி, மு.க ஸ்டாலின் ஆகியோர் குரல் கொடுத்தனர். நான் சொல்லாததை பொய்யாக திருத்தி இந்தியாவில் பல நீதிமன்றத்தில் என் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க சொன்னார்கள். நான் சொன்னா சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன் . அந்த வழக்குகளை நான் நீதிமன்றத்தில் சந்தித்து கொண்டு இருக்கின்றேன்.

மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நம் திராவிட மாடல் அரசு உள்ளது. 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை கொடுக்கப்பட்டு வருகின்றது. விடுபட்டவர்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் பல பேர் இந்தியை திணிக்க பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றனர். நேரடியாக அது முடியவில்லை. அதனால் தமிழ் தாய் வாழ்த்தில் சில வார்த்தைகளை நீக்குகின்றனர். புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சிக்கு பல பேர் துணை போகின்றனர். தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பி உள்ளனர். திமுகவின் கடைசி தொண்டனும், தமிழனும் இருக்கும் வரை தமிழையும், தமிழனையும், திராவிடத்தையும் தொட்டு கூட பார்க்க முடியாது. இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது” எனத் தெரிவித்துள்ளார்.