அரசியல்

'தமிழ், தமிழர்’ என்று பேசும் திமுக துரோகம் செய்கிறது- வானதி சீனிவாசன் பேட்டி!

"திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றன" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

'தமிழ், தமிழர்’ என்று பேசும் திமுக துரோகம் செய்கிறது- வானதி சீனிவாசன் பேட்டி!
Vanathi Srinivasan
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி, கோவையில் உள்ள புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கோவையில் சிறப்பு பூஜை

“இன்று ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த கொங்கு மண்டலத்தின் மைந்தன் சி.பி.ராதாகிருஷ்ணன் களம் இறங்கி இருக்கிறார். வெற்றி நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் கிடைக்கும். சி.பி.ராதாகிருஷ்ணன் தான் குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மேலும் அவர், “இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கோயில்களில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் நலனுக்காகச் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனைகள் செய்து வருகின்றனர். கோவையில் மட்டும் சுமார் 25 கோயில்களில் இந்தச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்.

திமுக மீது கடும் குற்றச்சாட்டு

“தமிழ், தமிழர் எனப் பேசிக்கொண்டு இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு ஒரு தமிழர் போட்டியிடும்போது, தமிழர்களின் முதுகில் குத்துவதுபோல ஒரு துரோகத்தைச் செய்து கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பாக ஒடிசாவைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக ஆனபோது, ஒடிசாவைச் சேர்ந்த அனைவரும் கட்சி வேறுபாடு இன்றி அவருக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஆனால், தமிழர் ஒருவருக்கு ஆதரவு தெரிவிக்காமல், திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணி கட்சிகளும் துரோகத்தைச் செய்கின்றன. வரலாறு இதை மன்னிக்காது” என வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

கூட்டணி குறித்த வானதி சீனிவாசனின் கருத்து

டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். போன்றோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிச் செல்வது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:

“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இருந்தனர், இருக்கிறார்கள், இருந்துகொண்டுதான் இருப்பார்கள். அந்தந்த கட்சிக்கு உள்ளாகச் சில பிரச்சினைகள் வரும்போது, அதற்கு ஏற்ப அந்தக் கட்சியின் தலைமை முடிவு செய்யும். 2026 தேர்தலில் தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதுதான் எங்கள் ஒற்றை இலக்கு. இதை உணர்ந்து கொண்டு அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் எண்ணம். இந்தத் தேர்தலில் கூட்டணியைத் தாண்டி, கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகப்போகிறது. விரைவில் அனைத்துச் சிக்கல்களும் சரி செய்யப்பட்டு, நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.