அரசியல்

மாப்பிள்ளை கட்சியாகும் தவெக! வாசலில் தவித்த மாஜிக்கள்!

'வணக்கம்டா மாப்ள பனையூர்ல இருந்து' என கடந்த வாரம் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த மாஜிக்கள் திடீரென பனையூரில் ஆஜராகியிருந்தனர். அவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய வந்தவர்கள் என்ற விவரம் பிறகுதான் தெரியவந்தது. இந்த இணைப்பு நிகழ்வு நடந்தேறிய பிறகு, மாஜிக்களை கட்சி அலுவலகத்திற்குள் விடாமல் கதவைப் பூட்டி அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மாப்பிள்ளை கட்சியாகும் தவெக! வாசலில் தவித்த மாஜிக்கள்!
மாப்பிள்ளை கட்சியாகும் தவெக! வாசலில் தவித்த மாஜிக்கள்!
தவெகவின் பனையூர் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் த.வெ.கவில் இணையும் விழா கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. அதில் முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜலட்சுமி (மயிலாப்பூர் தொகுதி), முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், திராவிட முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனர் ஸ்ரீதரன், ஜேப்பியார் கல்லூரி அறக்கட்டளை தலைவர் மரிய வில்சன், முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகிய முக்கிய பிரமுகர்கள் த.வெ.க தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். மேலும் ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற அருண்ராஜும் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைந்தார்.


இதுகுறித்து த.வெ.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "கட்சியில் இணைவதற்கு தங்களது ஆதரவாளர்களை மாஜிக்கள் கடந்த 9ம் தேதி அழைத்து வந்திருந்தனர். ஆனால், அவர்களை த.வெ.க. அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை. அலுவலக வாசல் கேட்டின் வெளியே அவர்கள் பரிதாபமாக நிற்க வைக்கப்பட்டிருந்தனர். விஜய்யுடன் குரூப் போட்டோ எடுத்த பின்னர், தங்களது ஆதரவாளர்களை சந்திக்க மாஜிக்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் அலுவலகத்திற்குள் மாஜிக்கள் செல்ல முயன்றபோது கேட்டை மூடிவிட்டனர். இதையடுத்து அங்கிருந்த நிர்வாகிகளிடம் கதவை திறக்கச் சொல்லி கெஞ்சியும் திறக்கவில்லை. இதனால் பொதுச்செயலாளர் என்.ஆனந்தை தொடர்பு கொண்டு பேச முயன்றனர். அவரும் போனை எடுக்கவில்லை. கட்சியில் சேர்ந்த சில நிமிடங்களிலேயே அலுவலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், மாஜிக்கள் கடும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விஜய் கட்சி ஆரம்பித்தபோது தாடி பாலாஜி உள்ளிட்ட சில நடிகர்கள் அவர் கூடவே இருந்தனர்.

ஆனால், அவர்களுக்கு தற்போது வரை எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா, அ.தி.மு.க.விலிருந்து சி.டி.ஆர். நிர்மல் குமார், பேச்சாளர் ராஜ்மோகன் ஆகியோர் கட்சியில் சேர்ந்தனர். அவர்கள் சேர்ந்த உடனேயே மாநிலப் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜுக்கும் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவியை விஜய் வழங்கியிருக்கிறார். இதில் ஆதவ் அர்ஜுனா பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் என்பதும், மரிய வில்சன் ஜேப்பியாரின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் பசையுள்ள பெரிய இடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் 'மாப்பிள்ளை கட்சி' என்ற விமர்சனம் தற்போது த.வெ.க மீது விழுந்திருக்கிறது.

தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருக்கும் நிலையில் அடிப்படை கட்டமைப்பை விஜய் இன்னும் வலுப்படுத்தவில்லை. நகர், மாநகர், ஒன்றிய அளவிலான பதவிகளும் நிரப்பப்படவில்லை. மாவட்டச் செயலாளர்களே இந்த வாரம் தான் முழுமையாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அடுத்தடுத்து செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஜேப்பியார் அரசியலைவிட்டு ஒதுங்கிய 36 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவருடைய மருமகன் அரசியலில் குதித்துள்ளார். ஜேப்பியார் பெயரில் இயங்கும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர்களில் முக்கியமானவராக மரிய வில்சன் இருக்கிறார். விஜய்யுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்த இவர் விக்கிரவாண்டி மாநாட்டிலேயே த.வெ.கவில் இணைய தயாராக இருந்தார். ஆனால், கொஞ்சம் பொறுத்திருக்குமாறு விஜய் கூறியதைத் தொடர்ந்து தற்போது த.வெ. கவில் இணைந்திருக்கிறார்.

மேலும், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சிடி.பிரபாகர், அமமுக நிர்வாகிகள் ஜெனிஃபர் சந்திரன், செந்தமிழன், ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், மருது அழகுராஜ் உள்ளிட்ட பலரும் த.வெ.கவில் இணைய கடிதம் அளித்துள்ளனர். அதே போன்று நாம் தமிழர் கட்சி காளியம்மாளிடம் த.வெ.க.வில் இணைய பேச்சுவார்த்தை நடத்திவிட்டு காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுபோக காங்கிரஸ் பெண் நிர்வாகியும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் தற்போது அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கிறார். அவரும் த.வெ.கவில் இணைய விஜய் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், விஜய் அவருக்கு நோ சொல்லிவிட்டார். அதே போன்று, மல்லை சத்யாவிற்கும், துரை வைகோவிற்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. அப்போது ம.தி.மு.க.வில் இருந்து மல்லை சத்யா நீக்கப்படுவார் என பேசப்பட்டது. அந்த நேரத்தில் தவெ.கவில் இணைய மல்லை சத்யா தரப்பு முயற்சி மேற்கொண்டது. ஆனால், தவெக தரப்பு மறுத்துவிட்டது. கட்சியில் இணைய விரும்புபவர்கள் தொடர்பாக ஆய்வு செய்ய த.வெ.கவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவே சம்பந்தப்பட்ட நபர் குறித்து ஆய்வு செய்து, அதனை பிரசாந்த் கிஷோர் டீமுக்கு அனுப்புகிறது. அவர்கள் அதை ஆய்வு செய்து ரிப்போர்ட் கொடுத்த பின்னரே, கட்சியில் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" என தெரிவித்தார்.

குமுதம் செய்திகளுக்காக செய்தியாளர் அரியன்பாபு...