அரசியல்

காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு பாஜக தீவிரமாகி வருகிறது என எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி

 காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ
திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் முழு அளவில் தயாராகி வருகிறோம். எங்களது தேர்தல் சுற்றுப்பயணத்திற்காக ஒரு பிரத்யேக வாகனம் தயாராகிவிட்டது. இந்த வாகனத்தை எங்கள் மாவட்ட நிர்வாகி ஒருவர் ஆர்வத்துடன் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

இதுவே எங்கள் தொண்டர்கள் எவ்வளவு எழுச்சியுடன் இருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சி. முன்பு நாங்கள் தான் தொண்டர்களைத் தயார்படுத்த வேண்டும். ஆனால், இப்போது அவர்களே தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு பிரச்சாரத்திற்குத் தயாராகிவிட்டனர்.

நெல்லையில் மாபெரும் கூட்டம்

தேர்தல் பணிகளின் முதல் கட்டமாக, தென் மாவட்டங்களில் உள்ள 5 நாடாளுமன்றத்தொகுதிகளை (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர்) உள்ளடக்கிய மாபெரும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம், வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. இதில், எங்களின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அல்லது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரில் ஒருவர் கலந்துகொள்வார். இதைத் தொடர்ந்து கொங்கு மண்டலம், திருச்சி, சென்னை என அடுத்தடுத்த கட்ட கூட்டங்கள் நடத்தப்படும்.

காவல்துறை மீது தாக்குதல்

தமிழகத்தில் காவலர்கள் தாக்கப்படுவது குறித்துக்கேட்ட கேள்விக்கு நயினார் நாகேந்திரன் ஆவேசமாக பதிலளித்தார்.அவர் கூறும்போது, "நான் முன்பே கூறியது போல, இந்த ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. முதலமைச்சர் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாகக் கூறுகிறார். ஆனால், உடுமலைப்பேட்டையில் நடந்த சம்பவம், காவல் நிலையத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போன்ற சம்பவங்கள் முதலமைச்சருக்குத் தெரியாதா? அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைக்கே இந்த நிலை என்றால், மக்கள் எப்படிப் பாதுகாப்பாக உணர்வார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

நீட் ரகசியம்

திமுகவின் நீட் தேர்வு ரகசியம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பது கோயபல்ஸ் தத்துவம். அதைத்தான் திமுகவினர் செய்தார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். தெரிந்தே பொய் சொல்லி ஓட்டு வாங்கினார்கள். இப்போது 5 ஆண்டுகள் முடியப்போகிறது. அந்த ரகசியம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. அடுத்த தேர்தலிலும் இதே பொய்யைச் சொல்வார்கள்" என்றார்.

கூட்டணியில் குழப்பமில்லை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்பது குறித்த கேள்விக்கு, "அவர் இரட்டை இலை சின்னத்திற்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களியுங்கள் என்றுதான் கூறுகிறார். இது ஒரு தீர்க்கமான முடிவு. இன்னும் தொகுதிப் பங்கீடு முடிவடையாத நிலையில், அவர் அவ்வாறு கூறுவது சரியானதுதான். இதில் எந்தக் குழப்பமும் இல்லை" என்று பதிலளித்தார்.